search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை சேதப்படுத்தியதாக தென்ஆப்பிரிக்க அணி மீது புகார்: டிவில்லியர்ஸ் கோபம்
    X

    பந்தை சேதப்படுத்தியதாக தென்ஆப்பிரிக்க அணி மீது புகார்: டிவில்லியர்ஸ் கோபம்

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பேட் செய்து கொண்டிருந்த போது 33-வது ஓவரில் தென்ஆப்பிரிக்க அணி மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    சவுதம்டன் :

    சவுதம்டனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. இதில் பென் ஸ்டோக்சின் சதத்தின் (101 ரன்) உதவியுடன் இங்கிலாந்து நிர்ணயித்த 331 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியால் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 328 ரன்களே எடுக்க முடிந்தது.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் 4 மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார். டேவிட் மில்லர் (71 ரன்), கிறிஸ் மோரிஸ் (35 ரன்) களத்தில் நின்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு பலன் இல்லாமல் போனது ஆச்சரியமே. முன்னதாக இங்கிலாந்து பேட் செய்து கொண்டிருந்த போது 33-வது ஓவரில் தென்ஆப்பிரிக்க அணி மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.


    பந்தை சேதப்படுத்திய பிரச்சினை தொடர்பாக நடுவர்களிடம் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கேப்டன் டிவில்லியர்சும், அம்லாவும் பேசுகிறார்கள்.

    அது குறித்து நடுவர்கள் தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்சிடம் பேசினர். ஆட்டம் முடிந்ததும் இந்த விவகாரம் குறித்து டிவில்லியர்சிடம் நிருபர்கள் கேட்ட போது ஆவேசப்பட்டார். அவர் கூறும் போது ‘பந்தின் தன்மை மாறி விட்டதாக நடுவர்கள் நினைத்தனர். ஒரு அணியாக நாங்கள் தான் அதற்கு பொறுப்பு என்பது போல் நிலைமை உருவானது. இதனால் நான் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளானேன். பிறகு எங்கள் தரப்பு விளக்கத்தை எடுத்துரைத்தேன்.

    நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நடுவர்கள் புரிந்து கொண்டதாலேயே அபராதம், எச்சரிக்கை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது இந்த விஷயம் முடிந்து போய் விட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பந்து மோசமாக இருந்தது. அதன் தயாரிப்பு சரியில்லை’ என்றார்.
    Next Story
    ×