search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்
    X

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
    லண்டன்:

    டாப்-8 அணிகள் இடையிலான 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் லீக்கில் பாகிஸ்தானை 4-ந்தேதி எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாக இந்திய அணி, 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    6 வார ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் விளையாடிய பிறகு இந்திய வீரர்கள் சந்திக்கும் முதல் ஒருநாள் (50 ஓவர்) போட்டி இதுவாகும். கடைசியாக இந்திய அணி, கடந்த ஜனவரி மாதத்தில் இங்கிலாந்துடன் ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தது.

    காயம் காரணமாக ஐ.பி.எல்.-ல் ஆடாத இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் உடல் தகுதி பெற்று இந்திய அணிக்காக நேரடியாக களம் காணுகிறார். காயத்தால் அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் அணியில் இடம் பிடித்துள்ளார். இருவரும் களத்தில் தங்களது முழு உடல்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.



    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பயிற்சியில் ஈடுபடாத அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா இன்று தான் அணியுடன் இணைய இருப்பதால் அவரும் களம் காண மாட்டார் என்று தெரிகிறது.

    இந்த பயிற்சி ஆட்டம் அதிகாரபூர்வமற்றது என்பதால் எல்லா அணிகளும் தங்கள் அணியின் 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களம் இறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தயாராவதற்கும், இங்குள்ள சூழலுக்கு தகுந்தபடி தங்களை மாற்றிக்கொள்வதற்கும் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று நம்பலாம்.

    இந்த போட்டிக்கான இரு அணிகள் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, டோனி (விக்கெட் கீப்பர்), யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ரஹானே, ஹர்திக் பாண்டியா, ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரித் பும்ரா.

    நியூசிலாந்து: கனே வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், லுக் ரோஞ்ச் (விக்கெட் கீப்பர்), நீல் புரூம், ஜேம்ஸ் நீஷம், கிரான்ட்ஹோம், கோரி ஆண்டர்சன், மிட்செல் சான்ட்னெர், ஜீத்தன் பட்டேல், ஆடம் மில்னே, மெக்லெனஹான், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2, 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×