search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி ‘லீக்’: உ.பி. வீரர் நிதின் தோமர் ரூ.93 லட்சத்துக்கு ஏலம்
    X

    புரோ கபடி ‘லீக்’: உ.பி. வீரர் நிதின் தோமர் ரூ.93 லட்சத்துக்கு ஏலம்

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டிக்கான ஏலத்தில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த நிதின் தோமர் அதிகபட்சமாக ரூ.93 லட்சத்துக்கு ஏலம் போனார்.
    புதுடெல்லி:

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி ஜூன் மாதம் 25-ந்தேதி தொடங்குகிறது. கடந்த 4 புரோ கபடி சீசனிலும் 8 அணிகள் பங்கேற்றன. இந்த சீசனில் கூடுதலாக 4 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சென்னை, அரியானா, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 12 அணிகள் பங்கேற்பதால் இந்த போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும்.

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டிக்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த ஏலப்பட்டியலில் முதலில் 420 பேர் இடம் பெற்று இருந்தனர். பின்னர் அது 131 ஆக குறைக்கப்பட்டது. 17 வெளிநாடுகளில் இருந்து 60 பேர் இடம் பெற்றனர். ஏலத்துக்கு ஒவ்வொரு அணியும் ரூ.4 கோடி செலவழிக்க வேண்டும். அதன்படி வீரர்கள் ஏலத்துக்கு மொத்தம் ரூ.48 கோடி செலவிடப்படும்.



    இதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நிதின் தோமர் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை ரூ.93 லட்சம் கொடுத்து உத்தரபிரதேச அணி வாங்கியது. 22 வயதான அவர் சிறந்த ரைடர் ஆவார். உத்தரபிரதேச மாநிலம் பகாபட் மாலிக்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

    அவருக்கு அடுத்தப்படியாக ரோகித்குமாரை ரூ.81 லட்சம் கொடுத்து பெங்களூர் அணியும், மஞ்சித் சில்லாரை ரூ.75.5 லட்சம் கொடுத்து ஜெய்ப்பூர் அணியும் வாங்கியது.

    சேலத்தை சேர்ந்த கே.செல்வமணியை ரூ.73 லட்சம் கொடுத்து ஜெய்ப்பூர் அணி வாங்கியது. பெங்கால் அணி காஜித்சிங் என்பவரை ரூ.73 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

    சென்னை அணியில் அமித் ஹூடா ரூ.63 லட்சத்துக்கு எடுக்கப்பட்டார். சென்னை அணியை கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கர் வாங்கி உள்ளார்.

    வெளிநாட்டு வீரர்களில் ஈரானை சேர்ந்த அப்சோர் அதிக விலைக்கு போனார். அவரை ரூ.50 லட்சம் கொடுத்து குஜராத் அணி வாங்கியது. இன்று 2-வது நாளாக வீரர்கள் ஏலம் நடக்கிறது.
    Next Story
    ×