search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கோப்பையுடன் மும்பை அணியின் உரிமையாளர் நீடா அம்பானி, ஆலோசகர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அணியினர்.
    X
    ஐ.பி.எல். கோப்பையுடன் மும்பை அணியின் உரிமையாளர் நீடா அம்பானி, ஆலோசகர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அணியினர்.

    முடியும் என்று நம்பினோம்; சாதித்து இருக்கிறோம்: மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேயை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்கடித்தது. சிறிய இலக்கு என்றாலும் நம்மால் முடியும் என்று நம்பினோம்; சாதித்து காட்டியிருக்கிறோம் என்று அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
    ஐதராபாத் :

    10-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த திரில்லிங்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் புனே சூப்பர் ஜெயன்ட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குணால் பாண்ட்யா 47 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

    அடுத்து களம் இறங்கிய புனே அணிக்கு விக்கெட்டுகள் கைவசம் இருந்தாலும் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினர். எதிர்பார்க்கப்பட்ட டோனி 10 ரன்னில் ஏமாற்றினார். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் வீசினார். இதில் புனே கேப்டன் ஸ்டீவன் சுமித் (51 ரன்), வாஷிங்டன் சுந்தர் (ரன்-அவுட்) ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்த அவர் இறுதி ஓவரில் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். புனே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 128 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஒரு ரன்னில் முடிவு கிடைத்திருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

    மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை (ஏற்கனவே 2013, 2015) வென்ற முதல் அணி என்ற புதிய சாதனையை படைத்த மும்பை அணிக்கு ரூ.15 கோடியும், 2-வது இடத்தை பிடித்த புனேவுக்கு ரூ.10 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இந்த சீசனின் மதிப்பு மிக்க வீரர் விருதை பென் ஸ்டோக்சும் (புனே), வளர்ந்து வரும் வீரர் விருதை பாசில் தம்பியும் (குஜராத்) பெற்றனர். இவர்கள் தலா ரூ.10 லட்சத்தை பரிசாக பெற்றனர்.


    உற்சாகத்தில் மும்பை வீரர்கள் குணால் பாண்ட்யா, மிட்செல் ஜான்சன், பும்ரா.

    வெற்றிக்கு பிறகு மும்பை கேப்டன் 30 வயதான ரோகித் சர்மா கூறியதாவது:-

    கிரிக்கெட்டில் இது ஒரு மகத்தான ஆட்டம். ரசிகர்கள் நிச்சயம் போட்டியை உற்சாகமாக கண்டு ரசித்து இருப்பார்கள். இது போன்ற சிறிய இலக்கை நிர்ணயிக்கும் போது, முதலில் நம்மால் வெற்றி பெற முடியும் என்ற உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியமாகும்.

    முதல் பாதி ஆட்டம் முடிந்து ஓய்வறையில் வீரர்கள் மத்தியில் “பலமான பேட்டிங் வரிசையை கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்சை முந்தைய ஆட்டத்தில் 107 ரன்களில் சுருட்டினோம் என்றால், புனே அணியையும் ஏன் நம்மால் மடக்க முடியாது. பீல்டிங்கில் கவனமுடன் செயல்படுங்கள். நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்’ என்று பேசி ஊக்கப்படுத்தினேன்.

    பிறகு முதல் 6 ஓவர் முடிந்திருந்த போது, ‘இது போன்ற வேகம் குறைந்த (ஸ்லோ) ஆடுகளத்தில் ஷாட் அடிப்பது எளிதான விஷயம் அல்ல. அதனால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கு மாறும். அதுவரை பொறுமையுடன் இருங்கள்’ என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கினேன். எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் ரன்வேகத்தை கட்டுப்படுத்தி நெருக்கடியை உருவாக்கினர். அதனால் புனே அணியினர் ஷாட் அடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பந்தை தூக்கியடித்து தவறிழைத்தார்கள்.

    மூன்று ஓவர் எஞ்சியிருந்த போது, எங்களது பவுலர்கள் (18-வது ஓவரில் மலிங்கா 7 ரன், 19-வது ஓவரில் பும்ரா 12 ரன், 20-வது ஓவரில் மிட்செல் ஜான்சன் 9 ரன்) வெற்றிக்குரிய பணியை கச்சிதமாக செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகரித்தது. அந்த சமயம் ‘இப்போது இங்கு நீங்கள் (பவுலர்கள்) தான் எல்லாமே. நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அதற்கு தகுந்தபடி பீல்டிங்கை மாற்றி அமைக்கிறேன்’ என்று கூறினேன். வெற்றிக்கான எல்லா புகழும் பந்து வீச்சாளர்களையே சாரும். குறைந்த இலக்கை வைத்து கொண்டு போராடி வெற்றி பெற்ற வகையில், இந்த இறுதிப்போட்டி எனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.


    வெற்றிமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மும்பை அணியின் உரிமையாளர் நீடா அம்பானி.

    பேட்டிங்கை பொறுத்தவரை நாங்கள் எங்களது திறமைக்கு ஏற்ப செயல்படவில்லை. இந்த ஆடுகளத்தில் 140 முதல் 160 ரன்கள் எடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தோம். 180 ரன்களை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடியிருந்தால் 120 ரன்னுக்குள் சுருண்டு இருப்போம். 160 ரன்கள் இந்த ஆடுகளத்தில் வெற்றிக்குரிய ஸ்கோராக இருந்து இருப்பதை நாங்கள் பார்த்து இருக்கிறோம்.

    தனிப்பட்ட வீரர்களின் செயல்பாட்டால் சில ஆட்டங்களில் வெற்றி பெறலாம். ஆனால் சாம்பியன்ஷிப் பட்டத்தை வசப்படுத்துவதற்கு அனைவரின் கடின உழைப்பும் அவசியம். அது பற்றி தொடரின் தொடக்கத்தில் இருந்தே பேசியுள்ளேன். முதல் இரு கோப்பையை வென்ற போது அதிக ரன்கள் குவித்த டாப்-5 பேட்ஸ்மேன்களில் எங்கள் அணி வீரர் ஒருவராவது இருந்தார். ஆனால் இந்த முறை அந்த பட்டியலில் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது கொஞ்சம் வருத்தம் தான்.

    ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வீரர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடினர். அது தான் இந்த ஆண்டில் எங்களின் தனி அடையாளம் ஆகும். வெற்றிக்கு நாங்கள் தனிப்பட்ட வீரரை ஒரு போதும் சார்ந்து இருந்ததில்லை. அதற்கு இன்றைய ஆட்டமே சரியான முன்னுதாரணம். கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு இது.

    சகோதரர்கள் ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா எங்கள் அணியில் விசேஷமான வீரர்கள் என்றே சொல்வேன். களத்தில் அவர்கள் ரொம்ப உற்சாகத்தோடு துருதுருவென வலம் வருவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆட்டத்தில் எந்த வகையிலாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். பேட்டிங், பந்து வீச்சில் மட்டுமல்ல, பீல்டிங்கிலும் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்


    கோப்பையுடன் மும்பை கேப்டன் ரோகித் சர்மா.

    மற்ற வீரர்கள் கருத்து வருமாறு:-

    ஸ்டீவன் சுமித் (புனே கேப்டன்): தோல்வியை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது. 130 ரன்கள் இலக்கு என்பது பெரிய ஸ்கோர் அல்ல. ஆனால் இந்த ஆடுகளத்தில் ரன் எடுக்க கஷ்டமாக இருந்தது. அவர்கள் போராடி வெற்றி பெற்று விட்டனர். அவர்களின் பந்து வீச்சு மிக நேர்த்தியாக இருந்தது. குறிப்பாக ஜான்சன், பும்ரா, மலிங்கா ஆகியோர் நன்றாக பந்து வீசினர். தோல்வி ஏமாற்றம் அளித்தாலும், இந்த தொடர் முழுவதும் நாங்கள் விளையாடிய விதம் பெருமை அளிக்கிறது.

    இந்த தருணத்தில் எங்கள் அணி நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அடுத்த முறை யார்-யார் எந்த அணியில் இருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

    மஹேலா ஜெயவர்த்தனே (மும்பை தலைமை பயிற்சியாளர்): போட்டியை எப்படி தொடங்குகிறோம் என்பது பொருட்டல்ல. எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியம். மும்பை எல்லாவற்றுக்கும் தகுதியான அணி. நெருக்கடியை சீனியர் பந்து வீச்சாளர்கள் திறம்பட சமாளிப்பார்கள் என்று கருதியே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தோம்.

    சச்சின் தெண்டுல்கர் (மும்பை அணியின் ஆலோசகர்): ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் வியப்புக்குரிய வெற்றி. முதல் பாதி ஆட்டம் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. இடைவேளையின் போது சில விஷயங்களை ஆலோசித்தோம். வெற்றி பெற முடியும் என்று நம்பினோம். அதை செய்திருக்கிறோம். நெருக்கடியான கட்டத்தில் மும்பை வீரர்கள் பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் அசத்தினர். மலிங்கா 10 ஆண்டுகளாக எங்கள் அணியில் இருக்கிறார். ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை படைத்த பவுலர்களில் மலிங்காவும் ஒருவர்.

    அம்பத்தி ராயுடு (மும்பை வீரர்): பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. ஆனால் கடைசி ஓவரில் ஸ்டீவன் சுமித்தின் கேட்ச்சை பிடித்தது, எனது வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக நிலைத்து நிற்கும்.

    மிட்செல் ஜான்சன் (மும்பை): அதிர்ஷ்டவசமாக எனது பணியை நல்லவிதமாக முடித்தேன். முந்தைய இரு ஓவர்கள் தான் வெற்றிக்கு அடித்தளமிட்டது.

    ஹர்திக் பாண்ட்யா (மும்பை): எனது சகோதரர் குணால் பாண்ட்யாவை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். சாம்பியன் வீரருக்குரிய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த தருணத்தை அவருடன் பகிர்ந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    குணால் பாண்ட்யா (மும்பை): ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றிக்கு பங்களிப்பு அளித்தது பெருமை அளிக்கிறது. எனது சாதனையின் பின்னணியில் சகோதரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் கணிசமான பங்கு உண்டு.

    பும்ரா (மும்பை): 17-வது ஓவரில் ஒரு விக்கெட் எங்களுக்கு தேவைப்பட்டது. டோனியின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனை. ஏனெனில் இது போன்ற சூழலில் அவர் அபாயகரமான வீரராக உருவெடுக்கக்கூடியவர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×