search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல் இறுதிப்போட்டி: புனே அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை
    X

    ஐ.பி.எல் இறுதிப்போட்டி: புனே அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை

    ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் புனே அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றது.
    ஐதராபாத்:

    ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் புனே அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றது.

    ஐ.பி.எல். கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி ஐதராபாத் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இந்நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 10 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. சிம்மன்ஸ்(3), பார்த்திவ் பட்டேல்(4) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இருப்பினும் ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மாவும் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பொல்லார்டும் 7 ரன்களில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

    பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா(10), கேவி.சர்மா(1)ரன்களில் ஆட்டமிழக்க 79 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது மும்பை இந்தியன்ஸ். இதனால் 100 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. இறுதியில் குணால் பாண்டியா இறுதி வரை நின்று விளையாடி 47 ரன்கள் குவித்து ஆட்டத்தில் இறுதி பந்தில் ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. புனே அணி தரப்பில் உனந்த்கண்ட், ஜம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதில் உனந்த்கண்ட் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் திரிபாதி பேட்டிங் செய்தனர். 3 வது ஓவரிலேயே 3 ரன்களுடன் திரிபாதி ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்மித் பொறுமையாக ரன்கள் சேர்க்க, ரஹானே அதிரடியாக விளையாடி 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து ரசிகர்களின் ஆரவாரத்தோடு தோனி பேட்டிங் செய்ய வந்தார். ஆனால், 12 பந்துகளில் 10 ரன்களை எடுத்த அவர் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். மற்றொரு புறம் ஸ்மித் பொறுமையாக ரன்களை சேர்த்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

    ஆட்டத்தின் 18-வது ஓவர்வரை பொறுமையாகவே விளையாடி வந்ததால் வெற்றி இலக்கு தள்ளிக்கொண்டே போனது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜான்சன் பந்து வீசினார். முதல் பந்தில் மனோஜ் திவாரி பந்தை பவுண்டரிக்கு விளாசினார். இதனால், 5 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

    இரண்டாவது பந்தில் திவாரி கேட்ச் ஆனார். இதையடுத்து கிறிஸ்டியன் களமிறங்கினார். அப்போது, 4 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. மூன்றாவது பந்தில் ஸ்மித் கேட்ச் அவுட் ஆக புனே அணியின் சாம்பியன் கனவில் கல் விழுந்தது. 3 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.

    நான்காவது பந்தில் ஒரு ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால், 2 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் கிறிஸ்டியன் இரண்டு ரன்களை எடுத்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் என்ற நிலையில், கிறிஸ்டியனால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    இதனால், ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதிகபட்சமாக புனே அணியின் கேப்டன் ஸ்மித் 51 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் ஜான்சன் 3 விக்கெட்டுகளைவும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 
    Next Story
    ×