search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். குவாலிபையர்-2: கொல்கத்தாவை 107 ரன்னில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்
    X

    ஐ.பி.எல். குவாலிபையர்-2: கொல்கத்தாவை 107 ரன்னில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்

    ஐ.பி.எல். குவாலிபையர் 2-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 108 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
    ஐ.பி.எல். குவாலிபையர்-2 ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குவாலிபையர் 1-ல் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். ஆடுகளம் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்ததால், கொல்கத்தா வீரர்கள் கடுமையான திணறினார்கள்.


    3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய பும்ப்ரா


    பும்ப்ரா, கரண் ஷர்மா அபாரமாக பந்து வீசினார்கள். ஆட்டத்தின் 2-வது ஓவரில் கிறிஸ் லின் 4 ரன்கள் எடுத்த நிலையில் பும்ப்ரா பந்தில் ஆட்டம் இழந்தார். சுனில் நரைன் 10 ரன்கள் எடுத்த நிலையில் கரண் ஷர்மா பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.

    அதன்பின் வந்த உத்தப்பா 1 ரன்னிலும், காம்பீர் 12 ரன்னிலும், கிராண்ட்ஹோம் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழக்க, 31 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு ஜக்கி உடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 87 ரன்னாக இருக்கும்போது ஜக்கி 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.


    31 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் யாதவ்

    அதன்பின் வந்த சாவ்லா 2 ரன்னிலும், கவுல்டர்-நைல் 6 ரன்னிலும் வெளியேறினார்கள். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக ராஜ்புத் மலிங்கா பந்தில் ஸ்டம்பை பறிகொடுக்க, கொல்கத்தா அணி 18.5 ஓவரில் 107 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் கரண் ஷர்மா 4 விக்கெட்டும், பும்ப்ரா 3 விக்கெட்டும், ஜான்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×