search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல்
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல்

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
    பெங்களூரு :

    10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ், 4-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பெங்களூருவில் 19-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

    2012, 2014-ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் 4-வது இடம் பெற்று பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. தனது கடைசி 7 லீக் ஆட்டங்களில் 4-ல் தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி கடைசி லீக் ஆட்டத்தில் 9 ரன் வித்தியாசத்தில் வலுவான மும்பை அணியை வீழ்த்தி இருந்தது.

    கொல்கத்தா அணியில் 19 பந்துகளில் அரை சதம் அடித்த கிறிஸ் லின் (285 ரன்கள், 5 ஆட்டங்களில் 3 அரை சதத்துடன்), 15 பந்துகளில் அரை சதம் அடித்து ஐ.பி.எல். சாதனையை சமன் செய்த ஆல்-ரவுண்டர் சுனில் நரின், 4 அரை சதம் உள்பட 454 ரன்கள் எடுத்துள்ள கேப்டன் கம்பீர், ராபின் உத்தப்பா (386 ரன்கள், 5 அரை சதத்துடன்), மனிஷ் பாண்டே (396 ரன்கள், 2 அரை சதத்துடன்) ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் கிறிஸ்வோக்ஸ் (17 விக்கெட்டுகள்), உமேஷ்யாதவ் (14 விக்கெட்டுகள்), குல்தீப் யாதவ் (12 விக்கெட்டுகள்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி 8 வெற்றி, 4 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) 17 புள்ளிகள் எடுத்து 3-வது இடம் பெற்று பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் மும்பை, குஜராத் அணிகளை முறையே 7 விக்கெட் மற்றும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.



    இந்த ஐ.பி.எல். லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஒரு சதம், 4 அரை சதம் உள்பட 604 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் அந்த அணியின் ஷிகர் தவான் (468 ரன்கள், 3 அரை சதத்துடன்) உள்ளார். 2 அரைசதம் உள்பட 243 ரன்கள் எடுத்துள்ள யுவராஜ்சிங் கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

    இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது சந்தேகத்தில் உள்ளது. புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் நெஹரா எஞ்சிய ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான தருணத்தில் சாதுர்யமாக பந்து வீசக்கூடிய நெஹரா இல்லாதது ஐதராபாத் அணிக்கு இழப்பாகும்.

    ஐதராபாத் அணியில் பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார் (25 விக்கெட்டுகள்), ரஷித் கான் (17 விக்கெட்டுகள்), சித்தார்த் கவுல் (16 விக்கெட்டுகள்), முகமது சிராஜ் (10 விக்கெட்டுகள்) ஆகியோர் அசத்தி வருகிறார்கள். அபாரமான பார்மில் இருக்கும் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னரை, கொல்கத்தா அணி வீரர்கள் விரைவில் ஆட்டம் இழக்க தவறினால், அவர் நிச்சயம் கொல்கத்தா அணிக்கு பெருத்த தலைவலியாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் அணி 4 முறையும், கொல்கத்தா அணி 7 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் தங்களுக்குள்ளான மோதலில் தலா ஒரு வெற்றி பெற்று இருக்கின்றன.

    கடந்த ஆண்டு நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா அணி, ஐதராபாத்திடம் தோல்வி கண்டு நடையை கட்டியது. அந்த தோல்விக்கு இந்த ஆட்டத்தில் பதிலடி கொடுக்க முயலும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்தது என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
    Next Story
    ×