search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசியாவில் ஆடை கவர்ச்சியாக இருந்ததாக கூறி செஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட 12 வயது சிறுமி
    X

    மலேசியாவில் ஆடை கவர்ச்சியாக இருந்ததாக கூறி செஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட 12 வயது சிறுமி

    மலேசியாவில் நடைபெற்ற உள்ளூர் செஸ் போட்டியில் கவர்ச்சியாக உடை அணிந்ததால் நடுவர், 12 வயது சிறுமியை போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் பிராந்திய சாம்பியன்ஷிப் செஸ் தொடர் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 12 வயது சிறுமி ஒருவர் முழங்கால் வரையிலாக ஆடை அணிந்து கொண்டு கலந்து கொண்டார். 2-வது சுற்றில் அவர் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது போட்டியின் தலைமை நடுவர், தொடரின் விதிமுறைக்கு மாறான ஆடை அணிந்து வந்திருப்பதாகக் கூறி அந்த சிறுமியை தொடரில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

    பின்னர், அந்த சிறுமி மற்றும் அவரது அம்மாவை அழைத்து, ‘‘சிறுமி அணிந்து வந்த உடை கவர்ச்சிகரமாகவும், சலனத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. ஆகையால்தான் அவளை வெளியெற்றினோம்’’ என்று கூறியுள்ளார்.

    மேலும், அருகில் உள்ள கடைக்குச் சென்று மாற்று உடை வாங்கி அணிந்து வரும்படி கூறியுள்ளார். உடை மாற்றி வருவதற்குள் போட்டிக்கான நேரம் முடிந்து விடும் என்பதால் அந்த சிறுமி தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

    இதுகுறித்து அந்த சிறுமியின் பயிற்சியாளரும், செஸ் வீரருமான கவுசல் கந்தர் கூறுகையில் ‘‘தேசிய ஸ்காலாஸ்டிக் செஸ் சாம்பியன்ஷிப் 2017 தொடரின் இயக்குனர் மற்றும் தலைமை நடுவரின் செயலால், சிறுமி மிகவும் சங்கடத்திற்குள்ளாகியுள்ளார். போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது அவர்கள் எடுத்த முடிவு தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த சிறுமியின் அம்மா இச்சம்பவம் குறித்து கூறுகையில் ‘‘போட்டியின் நடுவர் விளையாடிக்கொண்டிருந்த போது போட்டியை இடைமறித்து வெளியெற்றப்பட்டதால்  என்னுடைய மகள் அதிர்ச்சிக்குள்ளானார். உலக செஸ் பெடரேசன் விதிமுறைப்படி மரியாதைக்குரிய ஆடை அணிந்து விளையாட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இந்த தொடரில் கலந்து கொள்வதற்கு முன்பு இதுபோன்ற ஆடை கட்டுப்பாடு குறித்து எந்த வழிகாட்டுதலும் தெரிவிக்கப்படவில்லை’’ என்றார்.

    தொடரின் இயக்குனர், விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். ஆனால், கருத்து ஏதும் கூற மறுத்து விட்டார்.
    Next Story
    ×