search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்: பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை
    X

    ஐ.பி.எல்: பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை

    மும்பை - குஜராத் இடையேயான போட்டி சமனில் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர் முறையில் குஜராத் அணியை மும்பை வீழ்த்தியது.
    ராஜ்கோட்:

    ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயண்ஸ் அணிகள் பலப்பரிட்ச்சை நடத்தின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஸன், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர்.

    அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம் 6 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால், மற்றொரு தொடக்க வீரரான இஷான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். குறிப்பாக குஜராத் அணியின் கேப்டன் ரெய்னா 1 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் ஆனார்.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தாலும் ஜடேஜா, பல்க்னர், டை ஆகியோரின் போதிய பங்களிப்பால் குஜராத் அணி கவுரமான ரன்களை எட்டியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை அந்த அணி எடுத்தது. மும்பை அணி சார்பின் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், மலிங்கா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பார்தீவ் படேல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 44 பந்துகளுக்கு 9 பவுண்டரிகளும், 1 சிக்சருடன் 70 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு பொறுமையை சோதித்தனர். மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் வெளியேறி இந்த முறையும் சொதப்பினார்.

    பொல்லார்டு மற்றும் பாண்டியா சிறிது சிறிதாக ரன்கள் சேர்க்க அணியின் ஸ்கோர் மந்தமாக உயர்ந்தது. குஜராத் அணியின் இறுதி கட்ட நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை அணியின் பேட்டிங் வரிசை சிதறியது. 20 ஓவர்களின் முடிவில் 153 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.


    ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறை மும்பை அணியில் பொல்லார்டு மற்றும் பட்லர் களமிறங்கினர். குஜராத் அனியின் பல்க்னர் பந்து வீசினார். முதல் பந்தில் பட்லர் ஒரு ரன்களை எடுத்தார். இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பொல்லார்டு, மூன்றாவது பந்தை சிக்சருக்கு தூக்கினார். நான்காவது பந்தில் பொல்லார்டு கேட்ச் ஆக, ஐந்தாவது பந்தில் பட்லர் கேட்ச் ஆனார். இதனால், மும்பை அணி சூப்பர் ஓவரில் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

    12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் பின்ச், மெக்கல்லம் களமிறங்கினர். மும்பை அணியின் பும்ரா பந்து வீசினார். முதல் பந்தை பும்ரா நோ-பாலாக வீச குஜராத் அணிக்கு ப்ரீ ஹிட் பால் கிடைத்தது. ஆனால், அந்த பந்தில் பின்ச் ஒரு ரன்களை மட்டுமே எடுத்தார். இரண்டாவது பந்தை வைடாக பும்ரா வீச, குஜராத் ரசிகர்கள் உற்சாகமானார்கள்.

    பின்னர், அடுத்தடுத்த பந்துகளை பும்ரா மெதுவாக வீசியதால் குஜராத் வீரர்கள் ரன்கள் எடுக்க திணறினர். இறுதி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் என்ற நிலையில் மெக்கல்லம்-ஆல் ஒரு ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், பரபரப்பான இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.





    Next Story
    ×