search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று மோதல்
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று மோதல்

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் குஜராத் லயன்ஸ் அணி மோதுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது) 5 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது. முன்னணி பேட்ஸ்மேன்களான விராட்கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் இந்த சீசனில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாடாததால் 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பலம் வாய்ந்த பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் உருவாகி உள்ளது.

    பெங்களூருவில் நேற்று முன்தினம் நடக்க இருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக பெங்களூரு அணி 49 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது.

    எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியான நிலையுடன் பெங்களூரு அணி களம் காணுகிறது. முந்தைய மோசமான தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப பெங்களூரு அணி எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளும்.



    குஜராத் லயன்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. எஞ்சிய எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். வெய்ன் பிராவோ விலகியதால் அவருக்கு பதிலாக இர்பான் பதான் குஜராத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சொதப்பிய அவருக்கு ஆடும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

    புனே மற்றும் கொல்கத்தா அணிகளை வீழ்த்திய குஜராத் அணியின் பந்து வீச்சு பலவீனமாகவே இருந்து வருகிறது. பிரவீன்குமார் பந்து வீச்சு எடுபடவில்லை. அத்துடன் பேட்ஸ்மேன்களும் சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரு அணிகள் இடையிலான முந்தைய லீக் ஆட்டத்தில் குஜராத் அணி சொந்த மண்ணில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இரு அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களின் ஆட்டமும் எடுபட்டால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
    Next Story
    ×