search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி. வருவாய் பகிர்வு விவகாரம்: ஷசாங் மனோகரின் யோசனையை நிராகரித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்
    X

    ஐ.சி.சி. வருவாய் பகிர்வு விவகாரம்: ஷசாங் மனோகரின் யோசனையை நிராகரித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்

    ஐ.சி.சி. வருவாய் பகிர்வு விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஷசாங் மனோகர் புதிய சமரச திட்டத்தை ஏற்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.
    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) வருவாயில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக பங்கு அளிக்கும் வகையில் 2014-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட விதிமுறையில் மாற்றம் செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து புதிய திருத்தம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் விரைவில் நிறைவேற்றப்பட இருக்கிறது.

    ஆனால் இந்த விதிமுறை திருத்தத்தால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, இந்த விவகாரத்தில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஷசாங் மனோகர் புதிய சமரச திட்டத்தை முன்வைத்தார். அதன்படி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கப்படும் வருவாயுடன் கூடுதலாக ரூ.650 கோடியை ஐ.சி.சி.வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த யோசனையை ஏற்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது. இதனால் ஐ.சி.சி. வருவாய் பகிர்வு விதிமுறை திருத்த பிரச்சினையில் சிக்கல் தொடர்ந்து நீடிக்கிறது.

    ஐ.சி.சி.யுடனான வருவாய் பகிர்வு பிரச்சினை நீடித்து வரும் நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி கடைசி காலக்கெடு தேதியான நேற்றுக்குள் அறிவிக்கப்படவில்லை. மற்ற எல்லா நாடுகளும் தங்கள் அணிகளை அறிவித்து விட்ட நிலையில் இந்திய அணி மட்டும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் இந்த போட்டி தொடரில் இந்திய அணி பங்கேற்குமா? என்ற புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

    Next Story
    ×