search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஒற்றையரில் நடால் பட்டம் வென்று சாதனை
    X

    மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஒற்றையரில் நடால் பட்டம் வென்று சாதனை

    மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஒற்றையரில் ஸ்பெயின் ரபெல் நடால் பட்டம் வென்றார்.
    மான்ட்கார்லோ:

    மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஒற்றையரில் ஸ்பெயின் ரபெல் நடால் பட்டம் வென்றார்.

    மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வந்தது. இதன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), சக நாட்டவர் ஆல்பர்ட் ரமோஸ் வினோலாசை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் ஆல்பர்ட் ரமோசை பந்தாடி கோப்பையை கைப்பற்றினார்.

    பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் ரபெல் நடால் மகுடம் சூடுவது இது 10-வது முறையாகும். இதன் மூலம் ‘ஓபன் எரா’ வரலாற்றில் (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) குறிப்பிட்ட ஒரு போட்டித் தொடரில் 10 சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை நடால் படைத்தார்.

    அதே சமயம் ஓராண்டுக்கு பிறகு அவர் வென்ற முதல் சர்வதேச பட்டமும் இது தான். நடால் கூறுகையில், ‘இது எனக்கு வியப்புக்குரிய வாரமாக அமைந்தது. இங்கு நான் சிறப்பாக விளையாடினேன். அடுத்தடுத்து நடைபெற உள்ள களிமண் தரை போட்டிகளில் நம்பிக்கையுடன் செயல்பட இந்த வெற்றி உதவும்’ என்றார்.

    இரட்டையர் அரைஇறுதியில் ரொமைன்- ஹூகோ நைஸ் இணையை நேர் செட்டில் வெளியேற்றிய ரோகன் போபண்ணா (இந்தியா)- பாப்லோ கியூவாஸ் (உருகுவே) ஜோடி இறுதி ஆட்டத்தில் பெலிசியானோ லோப்ஸ்- மார்க் லோப்ஸ் (ஸ்பெயின்) கூட்டணியை எதிர்கொண்டது. 74 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 10-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது. இந்த சீசனில் போபண்ணா வசப்படுத்திய 2-வது பட்டம் இதுவாகும். ஏற்கனவே ஆண்டின் தொடக்கத்தில் ஜீவன் நெடுஞ்செழியனுடன் இணைந்து சென்னை ஓபனை வென்றிருந்தார்.

    வெற்றிக்கு பிறகு போபண்ணா கூறுகையில், ‘நாங்கள் இணைந்து முதல்முறையாக பட்டம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக மான்ட் கார்லோ போட்டியில் பங்கேற்றுள்ளேன். இது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தொடராகும். இதில் சில ஆட்டங்கள் மிக நெருக்கமாக டை-பிரேக்கர் வரை வந்தது. மொத்தத்தில் களிமண் தரை போட்டி சீசனுக்கு இந்த வெற்றி எங்களுக்கு சிறந்த தொடக்கமாகும். அடுத்து வரும் போட்டிகளிலும் சாதிக்கும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.’ என்றார்.

    போபண்ணா- கியூவாஸ் ஜோடிக்கு ஆயிரம் தரவரிசை புள்ளிகளும், ரூ.1¾ கோடி பரிசுத்தொகையும் கிடைத்தது. 
    Next Story
    ×