search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியின் அதிரடியால் கடைசி பந்தில் ஐதராபாத் அணிக்கெதிராக புனே த்ரில் வெற்றி
    X

    டோனியின் அதிரடியால் கடைசி பந்தில் ஐதராபாத் அணிக்கெதிராக புனே த்ரில் வெற்றி

    டோனியின் அதிரடி ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்துள்ளது.
    ஐ.பி.எல். தொடரில் இன்றைய இரண்டு போட்டிகளில் முதல் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி கேப்டன் ஸ்மித் பீல்டிங் தேர்வு செய்தார்.

    புனே அணியில் 17 வயதே ஆன தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். ராகுல் சாகர் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் யுவராஜ் சிங் உடல்நலக்குறைவால் விளையாடவில்லை. அவருக்குப்பதிலாக பிபுல் ஷர்மா சேர்க்கப்பட்டிருந்தார்.

    ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஐதராபாத் அணி 8.1 ஓவரில் 55 ரன்கள் எடுத்திருக்கும்போது தவான் 29 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 14 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    டேவிட் வார்னர் 40 பந்தில் 43 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். 4-வது வீரராக களம் இறங்கிய ஹென்றிக்ஸ் அதிரடியாக விளையாடி 28 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 55 ரன்கள் குவிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பேட்டிங்கை தொடங்கியது. ரகானே மற்றும் திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் ஸ்மித் களம் இறங்கினார். இவர் நிதானமாக விளையாட திரிபாதி அதிரடி ஆட்டம் காட்டினார்.

    இருவரும் அணியை சிறந்த வழியில் வழிநடத்திச் செல்லும்போது ஸ்மித் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 4-வது வீரராக டோனி களம் இறங்கினார். அரைசதம் அடித்த திரிபாதி துரதிருஷ்டவசமாக 59 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

    அடுத்த வந்த ஸ்டோக்ஸ் 10 ரன்னில் வெளியேற புனே அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 23 பந்தில் 56 ரன்கள் தேவைப்பட்டது. டோனியுடன் மனோஜ் திவாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டோனி ஒரு பவுண்டரி அடிக்க, 18 பந்தில் 47 ரன்கள் தேவைப்பட்டது.

    18-வது ஓவரை மொகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் திவாரி ஒரு பவுண்டரி, டோனி ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க புனே அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 12 பந்தில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை புவனேஸ்வர் குமார் வைடாக வீசினார். இதற்காக போடப்பட்ட பந்தையும், அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விரட்டிய டோனி, 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் 19-வது ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது.



    இதனால் கடைசி 6 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 20-வது ஓவரை கவுல் வீசினார். முதல் பந்தை திவாரி லெக் சைடு தூக்கி அடித்தார். கேட்ச் ஆக சென்ற பந்தை ரஷித் கான் பிடிக்க தவறினார். அத்துடன் பந்து பவுண்டரிக்குச் சென்றது. 2, 3 மற்றும் 4-வது பந்தில் தலா ஒரு ரன்கள் எடுத்தனர். ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுத்தனர். இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. டோனி அந்த பந்தை சந்தித்தார். எக்ஸ்ட்ரா கவரில் சிறப்பாக டோனி பவுண்டரி அடிக்க புனே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    டோனி 34 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 61 ரன்னுடனும், மனோஜ் திவாரி 8 பந்தில் 3 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    Next Story
    ×