search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: சேஸ், டவ்ரிச் ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது வெஸ்ட் இண்டீஸ்
    X

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: சேஸ், டவ்ரிச் ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது வெஸ்ட் இண்டீஸ்

    ஜமைக்காவில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் சேஸ், டவ்ரிச் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் சரிவில் இருந்து மீண்டுள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் நேற்று ஜமைக்கா கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரேக் பிராத்வைட், கீரன் பாவெல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். பாவெல் 33 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த ஹெட்மையர் (11), ஹோப் (2), விஷாயுல் சிங் (9) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 71 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சேஸ், டவ்ரிச் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரைசதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 189 ரன்னாக இருக்கும்போது இருவரும் யாசீர் ஷா வீசிய ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். சேஸ் 63 ரன்னும், டவ்ரிச் 56 ரன்னும் எடுத்தனர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து ஹோல்டர், பிஷூ களம் இறங்கினார்கள். 81-வது ஓவர் முடிந்த நிலையில் வெளிச்சம் இல்லாத காரணத்தினால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்துள்ளது. ஹோல்டர் 30 ரன்னுடனும், பிஷூ 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான அணி சார்பில் மொகமது ஆமிர் 3 விக்கெட்டும், யாசீர் ஷா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
    Next Story
    ×