search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - பாகிஸ்தான் விளையாடாமல் இருப்பது உலக ஹாக்கிக்கு நல்லதல்ல: பாக். பெடரேஷன்
    X

    இந்தியா - பாகிஸ்தான் விளையாடாமல் இருப்பது உலக ஹாக்கிக்கு நல்லதல்ல: பாக். பெடரேஷன்

    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஹாக்கி விளையாட்டு நடைபெறாமல் இருப்பது உலக ஹாக்கிக்கு நல்லதல்ல என்று பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி முடிந்த பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் தகாத செயல்களில் ஈடுபட்டனர். ரசிகர்களை நோக்கி தகாத வார்த்தைகளை கூறிய அவர்கள், மோசமான கை செய்கைகளையும் காட்டினார்கள்.

    இதற்கு பாகிஸ்தான் ஹாக்கி பெடரேஷன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹாக்கி இந்தியா கூறியது. ஆனால், பாகிஸ்தான் ஹாக்கி பெடரேஷன் மறுத்து விட்டது. ஆகையால், மன்னிப்பு கேட்கும்வரை பாகிஸ்தானுடன் ஹாக்கி போட்டி கிடையாது என்று ஹாக்கி இந்தியா திட்டவட்டமாக கூறியது.

    இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பாகிஸ்தானும், இந்தியாவும் ஹாக்கி போட்டியில் மோதுவது கிடையாது. இந்தியாவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் நிராகரித்தது. அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெறும் தொடரில் இருந்து இந்தியா விலகியுள்ளது. பாகிஸ்தான் இந்த தொடரில் பங்கேற்பதால் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

    இப்படியே சென்று கொண்டிருந்தால் உலக ஹாக்கி போட்டிக்கு சேதம் உண்டாகிவிடும். ஆசிய ஹாக்கி பெடரேஷன் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் கூறியுள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் அதிகாரி இஸ்லாகுதீன் சித்திக் கூறுகையில் ‘‘இந்திய ஹாக்கி அதிகாரிகள் இதை உணர்வு பூர்வமாக பார்த்து, தொடரை புறக்கணிப்பதை நிறுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், இது சர்வதேச ஹாக்கிக்கு உதவிகரமாக இருக்காது.

    ஹாக்கி இந்தியா நியாயமாக நடப்பதில்லை. அவர்கள் பாகிஸ்தான் ஹாக்கியை காயப்படுத்த முயற்சி செய்கிறது. ஆனால், முடிவில் இது உலக ஹாக்கியை சேதப்படுத்தும்’’ என்றார்.
    Next Story
    ×