search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மான்ட்கார்லோ டென்னிஸ்: ஆன்டி முர்ரே, நடால் வெற்றி
    X

    மான்ட்கார்லோ டென்னிஸ்: ஆன்டி முர்ரே, நடால் வெற்றி

    மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரபெல் நடால் ஆகியோர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.
    மான்ட்கார்லோ :

    பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), 28-ம் நிலை வீரர் ஜிலெஸ் முல்லரை (லக்சம்பர்க்) சந்தித்தார். காயம் காரணமாக 5 வார இடைவெளிக்கு பிறகு களம் கண்ட ஆன்டி முர்ரே முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் 7-5, 7-5 என்ற நேர்செட்டில் முல்லரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த ஆட்டத்தில் முர்ரே, 24-ம் நிலை வீரர் ஆல்பர்ட் ரமோஸ்சை (ஸ்பெயின்) எதிர்கொள்கிறார்.

    இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி 19 நிமிடங்களில் கைல் எட்மன்ட்டை (இங்கிலாந்தை) வெளியேற்றி 3-வது சுற்றை உறுதி செய்தார்.



    இன்னொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான மரின் சிலிச் (குரோஷியா) 6-3, 6-0 என்ற நேர்செட்டில் 71-ம் நிலை வீரர் ஜெரிம் சார்டியை (பிரான்ஸ்) எளிதில் தோற்கடித்தார். சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, தன்னை எதிர்த்த ஜிரி வெஸ்லியை (செக்குடியரசு) 6-2, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    டேவிட் கோபின் (பெல்ஜியம்), தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), பாப்லோ கார்னோ பஸ்தா (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)- பாப்லோ கியூவாஸ் (உருகுவே) ஜோடி 6-3, 6-7(5-7), 10-2 என்ற செட் கணக்கில் மார்சின் மாட்கோவ்ஸ்கி (போலந்து)- அலெக்சாண்டர் பெயா (ஆஸ்திரியா) இணையை சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
    Next Story
    ×