search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களம் திரும்ப ஆவலாக இருக்கிறேன்: ரோகித் சர்மா பேட்டி
    X

    களம் திரும்ப ஆவலாக இருக்கிறேன்: ரோகித் சர்மா பேட்டி

    காயத்தில் இருந்து குணமடைந்த இந்திய கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா, மீண்டும் களம் திரும்பும் ஆவலில் இருப்பதாக கூறியுள்ளார்.
    மும்பை:

    காயத்தில் இருந்து குணமடைந்த இந்திய கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா, மீண்டும் களம் திரும்பும் ஆவலில் இருப்பதாக கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியின் போது காயமடைந்தார். வலது தொடையில் காயமடைந்த அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் இருந்து ஒதுங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

    காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து உடல்தகுதியை எட்டி விட்ட அவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு தன்னை பயன்படுத்தி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓய்வில் இருந்தது 5 மாதங்கள் தான் என்றாலும், ஏதோ கிரிக்கெட் விளையாடி நீண்ட காலம் ஆனது போல் உணர்கிறேன். மீண்டும் களம் திரும்புவதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இந்த காயத்தால் நிறைய ஆட்டங்களை தவற விட்டு விட்டேன். ஆனால் காயமடையும் போது ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் இவ்வாறு எல்லாம் நடப்பது சகஜம் தான். பழைய நினைவுகளை திரும்பி பார்க்க விரும்பவில்லை. இந்த சீசனை புத்துணர்ச்சியுடன் சிறப்பாக தொடங்க விரும்புகிறேன்.

    நியூசிலாந்துக்கு எதிரான அந்த ஒரு நாள் போட்டியின் போது, ரன் எடுக்க ஓடுகையில் எனது தொடையில் திடீரென சத்தம் கேட்டது. இதனால் மிகவும் பயந்து போய் விட்டேன். இது போல் இதற்கு முன்பு நடந்ததில்லை. அதைத் தொடர்ந்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதன் பிறகு பல டாக்டர்கள் மற்றும் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்கட்டிடம் ஆலோசித்தேன். ‘அவர்கள் பயப்படும்படி இல்லை. சிறிய காயம் தான். சீக்கிரம் சரியாகி விடும்’ என்று நம்பிக்கை அளித்தனர். அதன் பிறகே அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்.

    இப்போது எனக்கு 29 வயது ஆகிறது. இந்த வயதில் 5 மாதங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை தவற விடுவது ஒன்றும் மோசமானது அல்ல. எதிர்காலத்திலும் இது போன்று நடக்கத்தான் செய்யும். அவ்வாறான சமயத்தில் மன உறுதியையும், நம்பிக்கையையும் இழந்து விடக்கூடாது. அது தான் முக்கியம்.

    நமது அணி விளையாடுவதை ஓட்டல் அறையில் (பெங்களூரு தேசிய அகாடமியில் பயிற்சி எடுத்த சமயம்) உட்கார்ந்து கொண்டு டி.வி.யில் பார்த்த போது மிகவும் கடினமாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. இதற்கு முன்பும் இது போன்ற அனுபவத்தை சந்தித்து இருக்கிறேன். அதனால் வெகு சீக்கிரம் களம் திரும்ப என்ன செய்வது என்பதில் தீவிர கவனம் செலுத்தினேன். தேசிய கிரிக்கெட் அகாடமியின் உதவியாளர்களை பாராட்டியாக வேண்டும். அவர்கள் எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருந்தனர்.

    பெரிய அளவில் காயம் ஏற்படும் போது, தசைவலிமை குறைந்து விடும். மிகவும் வலுமிக்கவராக பழைய நிலைக்கு திரும்புவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. நல்ல வேளையாக மீண்டும் களம் காண தயாராகி விட்டேன்.

    கடந்த ஆண்டில் எங்கள் அணியின் (மும்பை இந்தியன்ஸ்) ஆட்டம் சீராக இல்லை. இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கும் வேட்கையில் உள்ளோம். எங்களது முதல் ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட்சை (ஏப்ரல் 6-ந்தேதி) சந்திக்க உள்ளோம். சில புது வீரர்களின் வருகையால் தற்போது உற்சாகமிக்க அணியாக புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் காணப்படுகிறது.

    மும்பை அணியின் புதிய பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை) கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது அனுபவத்தையும், கிரிக்கெட் அறிவையும் பயன்படுத்திக்கொள்வோம்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார். 
    Next Story
    ×