search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில சங்கத்திற்கு ஐ.பி்.எல். போட்டிக்கான பணத்தை முன்னதாகவே கொடுக்க பி.சி.சி.ஐ. சம்மதம்
    X

    மாநில சங்கத்திற்கு ஐ.பி்.எல். போட்டிக்கான பணத்தை முன்னதாகவே கொடுக்க பி.சி.சி.ஐ. சம்மதம்

    மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஐ.பி.எல். போட்டி நடத்துவதற்கான 30 லட்சம் ரூபாயை முன்கூட்டியே கொடுப்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய பொழுதுபோக்கு கிரிக்கெட் திருவிழா ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்). இந்த வருடத்திற்கான ஐ.பி.எல். தொடர் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த போட்டி இந்தியாவில் உள்ள 10 மைதானத்தில் நடைபெறுகிறது. 8 மைதானங்கள் அந்தந்த அணியின் சொந்த மைதானமாக கருதப்படும். இரண்டு மைதானங்கள் பொது மைதானம் ஆகும்.

    ஒரு போட்டி நடத்துவதற்கான செலவு 60 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 30 லட்சம் ரூபாயை சொந்த மைதானமாக கருதும் ஐ.பி.எல். அணி மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு செலுத்த வேண்டும். இந்த பணத்தை போட்டி தொடங்குவதற்கு முன் செலுத்த வேண்டும். மீதமுள்ள 30 லட்சம் ரூபாயை பி.சி.சி.ஐ. மாநில சங்கத்திற்கு செலுத்தும். இந்த பணத்தை போட்டி நடைபெற்று முடிந்த இரண்டு வாரத்திற்குள் பி.சி.சி.ஐ. செலுத்தும்.

    தற்போது லோதா கமிட்டி பரிந்துரையை செயல்படுத்துவதில் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும், நிர்வாகக்குழுவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் 30 லட்சம் ரூபாய் கொடுப்பதில் இழுபறி நிலவி வந்தது. பிசிசிஐ பணம் கொடுக்காவிடில் ஐ.பி.எல். போட்டிக்கு ஒத்துழைப்பு தர முடியாது என்று மாநில சங்கங்கள் மிரட்டுவதாக ஒரு செய்தி வெளியானது.



    இதற்கு பிசிசிஐயின் நிர்வாகக்குழு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன், ஐ.பி.எல். போட்டிக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது.

    இந்நிலையில் கிரிக்கெட் சங்கத்துடன் நிர்வாகக்குழு சந்தித்து பேசியது. அப்போது போட்டி நடப்பதற்கு முன்கூட்டியே பணத்தை விடுவிக்க பி.சி.சி.ஐ.யின் நிர்வாகக்குழு சம்மதம் தெரிவித்தது.

    இதனால் பி.சி.சி.ஐ.யில் இருந்து கிடைக்கும் 30 லட்சம் ரூபாயையும் மாநில சங்கங்கள் முன்கூட்டியே பெற இருக்கிறது.
    Next Story
    ×