search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சானியா-ஸ்டிரிகோவா ஜோடி
    X
    சானியா-ஸ்டிரிகோவா ஜோடி

    மியாமி டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்

    அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மியாமி :

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள மிர்ஜனா லுசிச்-பரோனியை (குரோஷியா) எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார். அத்துடன் ஆஸ்திரேலிய ஓபன் கால்இறுதியில் அடைந்த தோல்விக்கும் 35 வயதான பரோனியை வஞ்சம் தீர்த்துக் கொண்டார்.

    மற்றொரு கால்இறுதியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் லூசி சபரோவாவை (செக்குடியரசு) வீழ்த்தினார். வெற்றிக்கனியை பறித்ததும் ரசிகர்களை நோக்கி பறக்கும் முத்தமிட்ட வோஸ்னியாக்கி, தன்னிடம் இருந்த சிவப்பு நிற பாவாடையை காட்டி எந்த ரசிகைக்காவது வேண்டுமா? என்று கேட்டார். பிறகு அதை ஒரு ரசிகையிடம் வழங்கினார். அரைஇறுதியில் வோஸ்னியாக்கி- பிளிஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.


    தன்னை தோற்கடித்த அலெக்சாண்டர் ஸ்வெரேவை பாராட்டுகிறார், வாவ்ரிங்கா (இடது).

    இதன் இரட்டையர் கால் இறுதியில் சானியா மிர்சா (இந்தியா), பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு) ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்டில் 64 நிமிடங்களில் வானியா கிங் (அமெரிக்கா)- யரோஸ்லாவா ஷிவ்டோவா (கஜகஸ்தான்) இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்த சீசனில் சானியா- பார்போரா கூட்டணி எட்டிய 6-வது அரைஇறுதி இதுவாகும். நேற்று முன்தினம் பார்போரா 31-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் பரிசாக அவருக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) தன்னை எதிர்த்து ஆடிய சென்னை ஓபன் சாம்பியனான பாவ்டிஸ்டா அகுத்தை (ஸ்பெயின்) 7-6 (7-5), 7-6 (7-4) என்ற நேர் செட்டில் வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 7-6 (4) என்ற நேர் செட்டில் நிகோலஸ் மகுத்தை (பிரான்ஸ்) தோற்கடித்து கால்இறுதியை உறுதி செய்தார்.

    அதே சமயம் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள 19 வயதான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), ஜாக் சோக் (அமெரிக்கா), நிஷிகோரி (ஜப்பான்), பாபியோ போக்னினி (இத்தாலி), நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் கால்இறுதியை எட்டினர். இதில் பெர்டிச் கால்இறுதியில் பெடரருடன் மோத உள்ளார்.
    Next Story
    ×