search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வலுவான நிலையில் நியூசிலாந்து அணி
    X

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வலுவான நிலையில் நியூசிலாந்து அணி

    ஹாமில்டனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
    ஹாமில்டன் :

    தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 314 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 104 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்து இருந்தது.

    கேப்டன் கனே வில்லியம்சன் 148 ரன்னுடனும், சான்ட்னெர் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய கனே வில்லியம்சன் 176 ரன்னிலும், சான்ட்னெர் 41 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் கண்ட வாட்லிங் (24 ரன்), மேட் ஹென்றி (12 ரன்), ஜீத்தன் பட்டேல் (5 ரன்), கிரான்ட்ஹோம்ப் (57 ரன்) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 162.1 ஓவர்களில் 489 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.



    தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் மோர்னே மோர்கல், ரபடா தலா 4 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 175 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சில் தொடக்க விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.

    நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து திணறியது. கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 15 ரன்னுடனும், குயின்டான் டி காக் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் ஜீத்தன் பட்டேல் 2 விக்கெட்டும், மேட் ஹென்றி, கிரான்ட்ஹோம்ப் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இன்று (புதன்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. தென்ஆப்பிரிக்க அணி 95 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. அந்த அணி கைவசம் 5 விக்கெட்டுகள் இருக்கிறது.
    Next Story
    ×