search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணியின் சாதனை துளிகள்
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணியின் சாதனை துளிகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நிதானமாக விளையாடி வரும் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 87 ரன்களே தேவைப்படுகிறது. இந்த டெஸ்டில் இந்திய அணியில் சாதனைத்துளிகளை பார்க்கலாம்.
    தரம்சாலா :

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நிதானமாக விளையாடி வரும் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 87 ரன்களே தேவைப்படுகிறது. இந்த டெஸ்டில் இந்திய அணியில் சாதனைத்துளிகளை பார்க்கலாம்.

    * இந்த சீசனில் (2016-17) இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (63 ரன்கள்) அடித்த 6-வது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் இந்த சீசனில் 6 அரை சதம் கண்ட இந்திய வீரர்களான விராட்கோலி, விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோருடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டார். இந்திய வீரர்களில் புஜாரா 12 அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். அத்துடன் இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலிலும் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்தை பெற்றுள்ளார்.

    * இந்த சீசனில் ரவீந்திர ஜடேஜா 13 டெஸ்டில் ஆடி 556 ரன்கள் குவித்ததுடன், 71 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரு சீசனில் 500 ரன்னும், 50 விக்கெட்டுக்கும் மேல் எடுத்த 3-வது வீரர் என்ற பெருமையை தனதாக்கி இருக்கிறார்.



    ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த கபில்தேவ் 1979-80-ம் ஆண்டில் 13 டெஸ்டில் விளையாடி 535 ரன்கள் திரட்டியதுடன், 63 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான்சன் 2008-09-ம் ஆண்டில் 12 டெஸ்டில் ஆடி 527 ரன்னையும், 60 விக்கெட்டையும் தனதாக்கி இருந்தார்.

    * இந்தியாவுக்கு எதிராக 14-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 5-வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

    * இந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ் 17 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஒரு டெஸ்ட் போட்டி தொடரில் அவர் கைப்பற்றிய அதிக விக்கெட்டுகள் இதுவாகும். 2011-12-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டி தொடரில் உமேஷ்யாதவ் 14 விக்கெட்டுகள் சாய்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
    Next Story
    ×