search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சன் பந்தை விரட்டுகிறார்.
    X
    நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சன் பந்தை விரட்டுகிறார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி 321 ரன்கள் குவிப்பு

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கனே வில்லியம்சன் சதத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது.
    ஹாமில்டன் :

    தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 314 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக குயின்டான் டி காக் 90 ரன்கள் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்து இருந்தது. டாம் லாதம் 42 ரன்னுடனும், ஜீத் ராவல் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய டாம் லாதம் (50 ரன்) மோர்னே மோர்கல் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இது டெஸ்ட் (74 டெஸ்டுகளில்) போட்டிகளில் மோர்னே மோர்கல் சாய்த்த 250-வது விக்கெட்டாகும். அடுத்து கேப்டன் கனே வில்லியம்சன், ஜீத் ராவலுடன் இணைந்தார்.

    இருவரும் நிலைத்து நின்று நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பொறுப்புடன் ஆடிய கனே வில்லியம்சன் 151 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் சதத்தை எட்டினார். 61-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கனே வில்லியம்சன் அடித்த 17-வது சதம் இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த (17 சதம், 77 டெஸ்டில்) நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குரோவின் சாதனையை அவர் சமன் செய்தார்.



    அணியின் ஸ்கோர் 273 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. ஜீத் ராவல் 88 ரன்னில் மோர்னே மோர்கல் பந்து வீச்சில் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ஜீத் ராவல்- கனே வில்லியம்சன் இணை 190 ரன்கள் திரட்டியது. அடுத்து களம் கண்ட புரூம் 12 ரன்னிலும், நிகோல்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். இருவரது விக்கெட்டையும் ரபடா வீழ்த்தினார்.

    நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 104 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. கேப்டன் கனே வில்லியம்சன் 216 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் 148 ரன்னும், சான்ட்னெர் 42 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    கனே வில்லியம்சன் 60 ரன்னை எட்டுகையில் டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரம் ரன்னை வேகமாக கடந்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை தனதாக்கினார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர்களில் மார்ட்டின் குரோவ் 69 டெஸ்டில் 5,000 ரன்னை கடந்ததே சாதனையாக இருந்தது. தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் மோர்னே மோர்கல், ரபடா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
    Next Story
    ×