search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியாமி டென்னிஸ்: 4-வது சுற்றில் ரபெல் நடால்
    X

    மியாமி டென்னிஸ்: 4-வது சுற்றில் ரபெல் நடால்

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 0-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் உலக தர வரிசையில் 31-வது இடத்தில் உள்ள பிலிப் கோஹிஸ்செரிபரை (ஜெர்மனி) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். தனது 1000-மாவது போட்டியில் ஆடிய ரபெல் நடால் பெற்ற 822-வது வெற்றி இதுவாகும்.

    4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், பிரான்ஸ் வீரர் நிகோலஸ் மகுட்டை சந்திக்கிறார். 3-வது சுற்று ஆட்டத்தில் நிகோலஸ் மகுட் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினா வீரர் குய்டோ பெலாவை தோற்கடித்து இருந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் நிஷிகோரி (ஜப்பான்) 7-6 (7-2), 6-7 (5-7), 6-1 என்ற செட் கணக்கில் 30-ம் நிலை வீரர் பெர்னாண்டோ வெர்டஸ்கோவை (ஸ்பெயின்) சாய்த்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் காயம் காரணமாக கடைசி நேரத்தில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் விலகியதால், அமெரிக்க வீரர் ஜாரெட் டொனால்ட்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் ஜாக் சோக் (அமெரிக்கா), பெடெரிகோ டெல்போனிஸ் (அர்ஜென்டினா), பாபியோ போக்னினி (இத்தாலி), டொனால்டு யங் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-4, 7-5 என்ற நேர்செட்டில் செல்பை ரோஜர்ஸ்சை (அமெரிக்கா) தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்ற ஆட்டங்களில் ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா), சிமோனா ஹாலெப் (ருமேனியா), ரிசா ஒசாகி (ஜப்பான்), ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா (ரஷியா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி கண்டனர். 
    Next Story
    ×