search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இது தான் சிறந்த ஆடுகளம் - லோகேஷ் ராகுல்
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இது தான் சிறந்த ஆடுகளம் - லோகேஷ் ராகுல்

    தரம்சாலா டெஸ்டில் 2-வது நாள் ஆட்டத்திற்கு பிறகு லோகேஷ் ராகுல் நிருபர்களிடம் இந்த தொடரில் நாங்கள் விளையாடிய ஆடுகளத்திலேயே இது தான் சிறந்தது’ என்று தனது கருத்தினை தெரிவித்தார்.
    தரம்சாலா :

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நிதானமாக விளையாடி வரும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

    தரம்சாலா டெஸ்டில் 2-வது நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் நிருபர்களிடம் கூறுகையில், ‘வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோரின் பந்து வீச்சு முதல் பகுதியில் மிக அபாரமாக இருந்தது. சரியான அளவில் பந்து வீசியதோடு, ஸ்விங்கும் செய்தனர். எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் சந்தித்த கடினமான பந்து வீச்சு அது தான். கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்தில் நான் அடித்த அந்த ஷாட், நிச்சயம் மோசமான ஒரு ஷாட் தான்.

    நல்ல தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போவது கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு இது ஒன்றும் மோசமான தொடர் அல்ல. நான் சிறப்பாக பேட் செய்துள்ளேன். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சமாளிப்பது எளிதான காரியம் அல்ல.



    எல்லா போட்டிகளிலும் அவர்கள் கடும் சவால் கொடுத்தனர். நானும் உற்சாகமாக பேட் செய்தேன். 2-வது இன்னிங்சில் இதை விட சிறந்த ஸ்கோர் எடுப்பேன் என்று நம்புகிறேன். ஆடுகளம் (பிட்ச்) நன்றாக இருக்கிறது. இந்த தொடரில் நாங்கள் விளையாடிய ஆடுகளத்திலேயே இது தான் சிறந்தது’ என்றார்.

    ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் கூறும் போது, ‘போக போக ஆடுகளத்தில் சுழற்பந்து பலவிதமாக திரும்பியது. நன்கு எகிறவும் (பவுன்ஸ்) செய்தது. இதில் இருந்து ஆடுகளத்தன்மை பெரிய அளவில் மாறாது என்று நினைக்கிறேன்.

     இந்திய அணியை 6 விக்கெட்டுக்கு 248 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த டெஸ்ட் இரண்டு அணிக்கும் சரிசம வாய்ப்பில் இருப்பதாக கருதுகிறேன். சொல்லப்போனால், இந்தியாவுக்கு தான் சிறிது நெருக்கடி இருக்கிறது. 4-வது இன்னிங்சில் (சேசிங் செய்கையில்) இந்திய அணி மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்’ என்றார்.
    Next Story
    ×