search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஓ.என்.ஜி.சி. அணியினர் பரிசு கோப்பையுடன் உள்ளனர்.
    X
    அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஓ.என்.ஜி.சி. அணியினர் பரிசு கோப்பையுடன் உள்ளனர்.

    அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஓ.என்.ஜி.சி. அணி சாம்பியன்

    கோவையில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஓ.என்.ஜி.சி. அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. மகளிர் பிரிவில் சத்தீஷ்கார் அணி வெற்றி பெற்றது.
    கோவை :

    அகில இந்திய அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்ற 31-வது பெடரேஷன் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் கடந்த 22-ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. நேற்று மாலை இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

    ஆண்கள் இறுதி சுற்று போட்டியில் ஓ.என்.ஜி.சி அணியை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடியது. இதில் ஓ.என்.ஜி.சி அணி 55 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. ஓ.என்.ஜி.சி. அணியின் அம்ரித்பால் சிங் 17 புள்ளிகளும், விஜேஷ் பிரிகுவான்சி 17 புள்ளிகளும் பெற்றனர். எதிர்த்து விளையாடிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 52 புள்ளிகள் பெற்றது. இந்த அணியின் பிரசன்னா வெங்கடேஷ் 14 புள்ளிகளும், பிரதம்சிங் 13 புள்ளிகளும் எடுத்தனர்.

    பெண்கள் இறுதி சுற்றுப்பிரிவில் சத்தீஷ்கார் அணியும் தென்னக ரெயில்வே அணியும் விளையாடின. இதில் சத்தீஷ்கார் அணி 77 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இந்த அணியின் வீராங்கனைகள் பூனம் சதுர்வேதி 28 புள்ளிகளும், சரன்ஜித் கவுர் 27 புள்ளிகளும் பெற்றனர். எதிர்த்து விளையாடிய தென்னக ரெயில்வே அணி 67 புள்ளிகள் பெற்றது. இந்த அணியின் வீராங்கனைகள் பி.அனிதா 23 புள்ளிகளும், எஸ்.நீனா 17 புள்ளிகளும் பெற்றனர்.



    முன்னதாக நேற்று காலை நடைபெற்ற மூன்று மற்றும் நான்காவது இடங்களுக்கான போட்டிகளில் பெண்கள் அணியில் மேற்கு வங்காள மாநில அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் மேற்கு வங்காள அணி 81 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இந்த அணியின் வீராங்கனைகள் சல்மா தேவி 22 புள்ளிகளும், மது குமாரி 20 புள்ளிகளும் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய தமிழ்நாடு அணி 52 புள்ளிகள் பெற்றது. இந்த அணியின் வீராங்கனைகள் வர்ஷநந்தினி 13 புள்ளிகளும் ஸ்ரீவித்யா சேகர் 12 புள்ளிகளும் பெற்றனர்.

    தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் அணியில் இந்தியன் ஏர்போர்ஸ் அணியை எதிர்த்து ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி விளையாடியது. இதில் இந்தியன் ஏர்போர்ஸ் அணி 85 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி 79 புள்ளிகள் பெற்றது.

    இறுதிப் போட்டியை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் வருமான வரி துறை ஆணையாளர் பி.செல்வகணேஷ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஓ.என்.ஜி.சி அணி மற்றும் சத்தீஷ்கார் அணிக்கு வெற்றி கோப்பையை பரிசாக வழங்கினார். அரைஸ் அறக்கட்டளை தலைவரும், தேசிய கூடைப்பந்து சாம்பியன் போட்டி ஏற்பாட்டு தலைவருமான ஆதவ் அர்ஜுனா, இந்திய கூடைப்பந்து கழக பொது செயலாளர் சந்தர் முகி சர்மா, தமிழ்நாடு கூடைப்பந்து கழக தலைவர் வி.வி.ஆர். ராஜ் சத்யன் அணி வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

    இறுதி போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ.75 ஆயிரமும், மூன்றாமிடம் பிடித்த அணிக்கு ரூ.50 ஆயிரமும் மற்றும் நான்காமிடம் பிடித்த அணிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.
    Next Story
    ×