search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி மீதான விமர்சனங்கள் வேதனை அளிக்கிறது: புஜாரா பேட்டி
    X

    விராட் கோலி மீதான விமர்சனங்கள் வேதனை அளிக்கிறது: புஜாரா பேட்டி

    இந்திய கேப்டன் விராட் கோலி மீதான விமர்சனங்கள் வேதனை அளிப்பதாக சக வீரர் புஜாரா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    தரம்சாலா :

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா 525 பந்துகளை சந்தித்து 202 ரன்கள் குவித்தார். இந்திய வீரர்களிலேயே ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை எதிர்கொண்டவர் என்ற புதிய சாதனையையும் படைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நாளை தொடங்க உள்ள நிலையில் புஜாரா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட விமர்சனங்கள் (அமெரிக்க அதிபருடன் ஒப்பிட்டு சாடல்) உண்மையிலேயே மிகுந்த வேதனை அளிக்கிறது. விராட் கோலிக்கு முழு ஆதரவுடன் பக்கபலமாக நாங்கள் நிற்கிறோம். கிரிக்கெட் விளையாட்டின் மிகச்சிறந்த தூதர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்கிறார். சிறந்த அணித்தலைவரும் ஆவார். சிலர் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் எங்களது கவனம் முழுவதும் கடைசி டெஸ்ட் போட்டி மீதே இருக்கிறது. மற்ற விவகாரங்களை ஒதுக்கிவிட்டு கடைசி டெஸ்டை எதிர்நோக்கி உள்ளோம்.

    களத்தில் பொறுமையாக செயல்படுவதற்கு கடின உழைப்பே காரணம். 8 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். முதல் முறையாக மாநில அணிக்காக 13 வயதில் பங்கேற்றேன். அதில் இருந்து நான் இந்த வடிவிலான போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறேன். உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவமும், கடின உழைப்பு தான் இப்போது கைகொடுப்பதாக நினைக்கிறேன்.



    உணவு கட்டுப்பாட்டில் எப்போதும் கவனம் செலுத்துகிறேன். சரியான நேரத்தில் தூங்கி விடுவேன். அது மிகவும் முக்கியம். உடல் வலி இருக்கும் போது அதில் இருந்து மீள்வதற்கு ‘மசாஜ்’ எடுத்துக் கொள்வேன். சோர்வடையும் போது, ‘அணிக்காக வெற்றி பெற வேண்டும், தொடரை வசப்படுத்த வேண்டும் அதுவே உச்சக்கட்ட இலக்கு’ என்று எனக்கு நானே உத்வேகத்தை தட்டி விடுவேன். அது புத்துணர்ச்சி பெற உதவும்.

    தரம்சாலா ஆடுகளத்தை பார்க்கும் போது, நன்றாகவே தோன்றுகிறது. இங்கு நாங்கள் நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறோம். போதுமான முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ள எங்களுக்கு இங்குள்ள சூழல் நன்கு தெரியும். ஆடுகளம் எப்படி இருக்குமோ என்பதை பற்றி கவலைப்படாமல், ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த முயற்சிப்போம்.

    இந்திய கிரிக்கெட் வாரிய ஊதிய ஒப்பந்தத்தில் ‘ஏ’ கிரேடுக்கு உயர்த்தப்பட்டு இருப்பது குறித்து கேட்கிறீர்கள். எனது திறமையை அங்கீகரித்து இருப்பது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால் இப்போது டெஸ்ட் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் குறித்து சிந்திக்க விரும்பவில்லை.

    இவ்வாறு புஜாரா கூறினார்.
    Next Story
    ×