search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தின் தன்மை மாறியதால் பாதிப்பு: விராட்கோலி
    X

    பந்தின் தன்மை மாறியதால் பாதிப்பு: விராட்கோலி

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே ராஞ்சியில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. ஆட்டம் முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    ராஞ்சி :

    ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    ஆட்டம் முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நேற்று மாலை (நேற்று முன்தினம்) பந்து புதியதாக இருந்ததால் கடின தன்மையுடன் நன்கு சுழன்றது. இன்று (நேற்று) காலையிலும் பந்தின் சுழல் சிறப்பாக இருந்தது. ஆனால் மிடில் பகுதி ஆட்டத்தில் பந்து தனது கடின தன்மையை இழந்து விட்டதால் வேகமாக சுழலவில்லை.

    5-வது நாளில் விக்கெட் சுலோவாக தான் இருக்கும். நாங்கள் புதிய பந்தை எடுக்கையில் இரண்டு விக்கெட்டை கைப்பற்றினாலும், மிடில் பகுதி ஆட்டத்தில் பந்தின் கடின தன்மை மாறியது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்ஸ்களில் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது.



    இதனால் பந்து வீச்சாளர்களுக்கு பணி எளிதாக இருந்து இருக்காது. முதல் இன்னிங்சில் நாங்கள் 600 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி வாய்ப்பில் தான் இருந்தோம். ஆனால் ஆஸ்திரேலிய அணியினர் 2-வது இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்து டிரா செய்தனர். நம்பர்-2 அணிக்கு எதிராக விளையாடுகையில் அவர்கள் சரிவில் இருந்து முன்னேறுவார்கள் என்பதை எதிர்பார்த்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

    ஆஸ்திரேலிய அணி டிரா செய்யும் நோக்கில் விளையாடியது. எங்களது ஆட்டம் எல்லா வகையிலும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா, விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் ஆட்டம் விலைமதிக்க முடியாததாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×