search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலியின் காயம் குறித்து கேலி: ஸ்மித், மேக்ஸ்வெல்-க்கு லஷ்மண் கடும் கண்டனம்
    X

    கோலியின் காயம் குறித்து கேலி: ஸ்மித், மேக்ஸ்வெல்-க்கு லஷ்மண் கடும் கண்டனம்

    தோள்பட்டையில் ஏற்பட்ட விராட் கோலியின் காயம் குறித்து கேலி செய்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல்லிற்கு லஷ்மண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பவுண்டரி லைன் அருகே விழுந்து பீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. 39.1-வது ஓவருக்குப் பிறகு அவர் முதல் இன்னிங்ஸ் முழுவதும் பீல்டிங் செய்யவில்லை.

    பின்னர் இந்தியா பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் பவுண்டரி லைனில் விழுந்து பீல்டிங் செய்தார். அப்போது வலது கை தோள்பட்டையை பிடித்துக் கொண்டு வலி ஏற்பட்டது போல் செய்கை காட்டினார். இதேபோல், விராட் கோலியை 2-வது ஸ்லிப் திசையில் நின்ற ஸ்மித் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அப்போது ஸ்மித்தும் கோலி காயத்தால் அவதிப்பட்டதை அப்படியே செய்து காட்டி கேலி செய்தார்.

    இந்த சம்பவத்திற்கு இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் லஷ்மண் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லஷ்மண் கூறுகையில் ‘‘கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்மித் ஆகியோரின் செயல்பாடு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர்கள் இருவரும் அணிக்கு என்ன மாதிரி உதாரணமாக இருக்கிறார்கள்?. நீங்கள் ஸ்லெட்ஜிங் செய்யலாம். ஆனால், ஒருவருடைய காயம் குறித்து கேலி செய்யக்கூடாது. அது வலியைத் தரும்.

    ஒருவர் காயத்தால் அவதிப்படும்போது இதுபோன்ற சம்பவத்தை நான் கண்டதில்லை. எல்லோரும் எதிரணி வீரர்களின் நலனில் அக்கறையாக இருப்பார்கள். குறிப்பாக பில் ஹியூக்ஸ் மரணத்திற்கு பிறகு, எந்தவொரு வீரருக்கும் காயம் ஏற்பட்டால் மற்ற வீரர்கள் கவலையடைவார்கள்.

    பந்து ஹெல்மெட்டில் பட்டாலும் அல்லது வேறுவகையில் காயம் பட்டாலும் கவலையடைவார்கள். நீங்கள் கடினமான வழியில் விளையாடலாம். ஆனால், கிரிக்கெட் போட்டிக்கான ஸ்பிரிட் அங்கே இருக்க வேண்டும். இந்த சம்பவம் ஸ்பிரிட்டை மீறிவதாகும்’’ என்றார்.
    Next Story
    ×