search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100-வது டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியதுடன், தொடரையும் சமன் செய்தது வங்காள தேசம்
    X

    100-வது டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியதுடன், தொடரையும் சமன் செய்தது வங்காள தேசம்

    கொழும்பில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இலங்கையை 4 வி்க்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், தொடரையும் சமன் செய்தது வங்காள தேசம்.
    இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்பில் நடைபெற்றது. ஏற்கனவே காலேவில் நடைபெற்ற போட்டியில் வங்காள தேசம் தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் களம் இறங்கியது. மேலும் அந்த அணிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். 100-வது போட்டியில் வெற்றி பெற்று சரித்திரத்தில் முத்திரை பதித்து விட வேண்டும் என்றும் திட்டமிட்டது.

    இலங்கை அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து வங்காள தேசத்தையும் ஒயிட்வாஷ் செய்து விடவேண்டும் என்று எண்ணியது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் வங்காள தேச அணியினர் சிறப்பாக பந்து வீசி இலங்கையை 338 ரன்னில் சுருட்டினார்கள். இலங்கை அணியின் சண்டிமல் மட்டும் தாக்குப்பிடித்து 138 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் அணி சார்பில் மெஹதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டும், முஸ்டாபிஜூர் ரஹ்மான், சுபாஷிஸ் ராய், சாஹிப் அல் ஹசன் ஆகியோர் தலா இரண்டு வி்க்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேச அணி 467 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் (49), சவுமியா சர்கர் (61), இம்ருல் கெய்ஸ் (34), சபீர் ரஹ்மான் (42) கவுரமான ஸ்கோர் அடித்தனர். அதன்பின் வந்த சாஹிப் அல் ஹசன் 200-வது போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அவர் 159 பந்தில் 116 ரன்கள் சேர்த்து அணி அதிக அளவில் முன்னணி வகிக்க உதவி புரிந்தார்.

    முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 129 முன்னிலைப் பெற்றது. 129 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் கருணாரத்னே சிறப்பாக விளையாடினார். அவரைத் தவிர முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். 126 ரன்கள் சேர்த்த கருணாரத்னே 7-வது வீரராக அவுட் ஆனார். அப்போது இலங்கை 217 ரன்கள் எடுத்திருந்தது. 8-வது விக்கெட்டாக களம் இறங்கிய தில்ருவான் பெரேராவும் (50) , 10-வது வீரராக களம் இறங்கிய சுரங்கா லக்மலும் (42) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை 319 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. சாஹிப் அல் ஹசன் 4 விக்கெட்டும், முஸ்டாபிஜூர் ரஹ்மான் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இதனால் வங்காள தேச அணியின் வெற்றிக்கு 191 ரன்கள் இலக்கான நிர்ணயிக்கப்பட்டது. கொழும்பு ஆடுகளத்தில் ஐந்தாவது நாளில் 150 ரன்களுக்கு மேல் என்பது மிகக்கடினம். ஆனால் வங்காள தேச அணியினர் நம்பிக்கையுடன் களம் இறங்கினார்கள்.



    தொடக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்கர் ஆகியோர் களம் இறங்கினார்கள். சவுமியா சர்கர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் இம்ருல் கெய்ஸ் டக்அவுட் ஆகி வெளியேறினார். இதனால் வங்காள தேசம் 22 ரன்னுக்குள் 2 விக்கெட்டை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு தமீம் இக்பாலுடன் சபீர் ரஹ்மான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தமீம் இக்பால் 82 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். சபீர் ரஹ்மான் 41 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது. இது வங்காள தேச அணிக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது.

    அடுத்து வந்த சாஹிப் அல் ஹசன் 15 ரன்னும், மொசாடெக் ஹொசைன் 13 ரன்னும் எடுத்து வெளியேறினாலும், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 22 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருக்க, வங்காள தேச அணி 57.5 ஓவரில் 191 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என சமநிலைப் படுத்தியதுடன், 100-வது போட்டியில் வெற்றி பெற்று சாதனைப்படைத்துள்ளது. தமீம் இக்பால் ஆட்ட நாயகன் விருதையும், சாஹிப் அல் ஹசன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றனர்.
    Next Story
    ×