search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டெஸ்ட்: புஜாரா அதிரடியால் இந்திய அணி முன்னிலை
    X

    ராஞ்சி டெஸ்ட்: புஜாரா அதிரடியால் இந்திய அணி முன்னிலை

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் புஜாராவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
    ராஞ்சி:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்தது. கேப்டன்  ஸ்மித் 178 ரன்னும், மேக்ஸ்வெல் 104 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன் எடுத்து இருந்தது. முரளி விஜய் 82 ரன்னும், தொடக்க வீரர் ராகுல் 67 ரன்னும் எடுத்தனர். புஜாரா 130 ரன்னும், விருத்திமான் சகா 18 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 4 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

    புஜாராவும், விருத்திமான் சகாவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் 147.4-வது ஓவரில் இந்திய அணி 400 ரன்னை கடந்தது.

    புஜாரா மிகவும் சிறப்பாக விளையாடி 150 ரன்னை குவித்தார். 391 பந்துகளை சந்தித்து 18 பவுண்டரிகளுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.



    மறுமுனையில் இருந்த விருத்திமான் சகாவும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 100 பந்துகளை சந்தித்து அரை சதத்தை எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். 24-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 5-வது அரை சதமாகும்.

    இந்த ஜோடியை அவுட் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். புஜாரா-சகா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 257 பந்துகளில் 100 ரன் சேர்த்தது.

    மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 435 ரன் குவித்து பதிலடி கொடுத்தது. புஜாரா 164 ரன்னும், விருத்திமான் சகா 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். புஜாராவின் அபாரமான ஆட்டத்தால் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தலை நிமிர்ந்தது. 

    உணவு இடைவெளிக்கு பின் துவங்கிய ஆட்டத்தில் தற்சமயம் வரை இந்திய அணி 466 / 6 என்ற நிலையில் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆஸ்திரேலியாவை விட  இந்திய அணி 15 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  
    Next Story
    ×