search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
    X

    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

    டெல்லியில் நேற்று நடந்த விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் இடையேயான போட்டியில் குஜராத்தை பதம் பார்த்து தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
    புதுடெல்லி :

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று நடந்த கால்இறுதியில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் சந்தித்தன.

    ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த குஜராத் அணி 49.4 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ருஜூல் பாத் 83 ரன்களும், சமித் கோஹெல் 39 ரன்களும் எடுத்தனர். தமிழகம் தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 42.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 217 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி கண்டு அரைஇறுதிக்குள் நுழைந்தது. கங்கா ஸ்ரீதர் ராஜூ (85 ரன், 95 பந்து, 12 பவுண்டரி), முகமது (35 ரன், நாட்-அவுட்), பாபா அபாராஜித் (34 ரன்) வெற்றிக்கு வித்திட்டனர்.



    மற்றொரு கால்இறுதியில் மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணி, இர்பான் பதான் தலைமையிலான பரோடாவை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த கர்நாடக அணி 48.5 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தேஷ்பாண்டே 54 ரன்களும், சமார்த் 44 ரன்களும், மயங்க் அகர்வால் 40 ரன்களும் எடுத்தனர். 3 வீரர்கள் ரன்-அவுட் ஆனது கர்நாடகாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து ஆடிய பரோடா அணி 45.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. கேதர் தேவ்தார் 78 ரன்களும், குணால் பாண்ட்யா 70 ரன்களும் விளாசினர்.

    வருகிற 16-ந்தேதி நடக்கும் அரைஇறுதியில் தமிழ்நாடு- பரோடா அணிகள் மோத உள்ளன. பெங்கால்- மராட்டியம், விதர்பா-ஜார்கண்ட் ஆகிய அணிகள் இடையிலான கால்இறுதியில் வெற்றி பெறும் அணிகள் 2-வது அரைஇறுதியில் சந்திக்கும்.
    Next Story
    ×