search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்கி இந்தியா லீக்: மும்பையை வீழ்த்தி கலிங்கா அணி சாம்பியன்
    X

    ஆக்கி இந்தியா லீக்: மும்பையை வீழ்த்தி கலிங்கா அணி சாம்பியன்

    கலிங்கா லான்செர்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
    சண்டிகார்:

    6 அணிகள் இடையிலான 5-வது ஆக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப் வாரியர்ஸ், லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

    சண்டிகாரில் நேற்றிரவு நடந்த சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் கலிங்கா லான்செர்சும் (ஒடிசா), தபாங் மும்பையும் மல்லுட்டின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கலிங்கா அணிக்கு 18-வது நிமிடத்தில் கிளைன் டர்னர், பீல்டு கோல் (இந்த போட்டியில் பீல்டு கோல் என்பது 2 கோலாக கணக்கிடப்படும்) மூலம் முன்னிலை ஏற்படுத்தி தந்தார். 30-வது நிமிடத்தில் கலிங்கா அணியின் கேப்டன் மோரிட்ஸ் புயர்ஸ்டி பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினார். இதன் பின்னர் 33-வது நிமிடத்தில் மும்பை வீரர் அபான் யூசுப், பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் போட்டார். மேலும் கோல்களை திணிக்க மும்பை வீரர்கள் கடுமையாக முயன்றும் பலன் கிட்டவில்லை. அதே சமயம் ஒரு நிமிடம் எஞ்சியிருந்த நிலையில் மோரிட்ஸ் புயர்ஸ்டி, மறுபடியும் ஒரு கோல் (பெனால்டி கார்னர் வாய்ப்பில்) அடித்து அட்டகாசப்படுத்தினார். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் கலிங்கா லான்செர்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உத்தரபிரதேச விசார்ட்ஸ் அணி 5-4 என்ற கோல் கணக்கில் டெல்லி வேவ்ரைடர்சை தோற்கடித்து 3-வது இடத்திற்குரிய வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 3-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த உத்தரபிரதேச அணி, 57-வது நிமிடத்தில் அகஸ்டின் மாஸ்ஜில்லி அடித்த பீல்டு கோல் மூலம் வெற்றியை உறுதி செய்தது. 
    Next Story
    ×