search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்
    X

    இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை தொடங்குகிறது.
    புனே:

    ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இலங்கை (2-1), தென்னாப்பிரிக்கா (3-0), வெஸ்ட் இண்டீஸ் (2-0), நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), வங்காளதேசம் (1-0) ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் தொடரை வென்றது. மீதியுள்ள 4 தொடர் சொந்தமண்ணில் கைப்பற்றப்பட்டது.



    தற்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 7-வது டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக வெல்லும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    இந்திய அணி கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலேயில் நடந்த டெஸ்டில் இலங்கையிடம் 63 ரன்னில் தோற்றது. அதன்பிறகு விளையாடிய 19 டெஸ்டில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. இதில் 15 டெஸ்டில் வெற்றி பெற்றது. 4 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    தோல்வியை சந்திக்காமல் விளையாடி வரும் இந்திய அணியின் சாதனை ஆஸ்திரேலிய தொடரிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவரது ரன் குவிப்பில் இந்திய அணி டெஸ்டில் சமீபகாலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    வங்காளதேசத்துக்கு எதிராக ‘இரட்டை சதம்’ (204 ரன்) அடித்ததன் மூலம் அவர் புதிய வரலாறு படைத்தார். 4 டெஸ்ட் தொடர்களில் நான்கு இரட்டை சதம் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் வெஸ்ட் இண்டீஸ் (200), நியூசிலாந்து (211) , இங்கிலாந்துக்கு (235) எதிராகவும் இரட்டை சதம் அடித்து இருந்தார்.



    ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் விராட் கோலி தனது அதிரடியை வெளிப்படுத்தும் வேட்கையில் உள்ளார். அந்த அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அவர் சவாலை சந்திக்கும் நிலையில் ஆட வேண்டி இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள் அவரை ‘சிலெட்ஜிங்’ செய்து சீண்டினால் ஆக்ரோ‌ஷமாகி விடுவார்.

    இதுதவிர தொடக்க வீரர்கள் ராகுல், முரளி விஜய், புஜாரா, ரகானே, விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    சுழற்பந்து வீச்சில் அஸ்வின்- ஜடேஜா கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக விக்கெட்டுகளை அள்ளி குவித்த இந்த இருவரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.



    அஸ்வின் வங்காளதேசத்துக்கு எதிராக 6 விக்கெட் எடுத்தார். இதன்மூலம் 250 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்தார். கேப்டன் கோலியின் எதிர் பார்ப்புக்கு உரிய வீரராக சென்னையை சேர்ந்த அஸ்வின் இருக்கிறார்.

    இதுதவிர ஜெயந்த் யாதவ், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கிறது. கேப்டன் சுமித், வார்னர், மார்ஷ் சகோதரர்கள், ஸ்டார்க், ஹாசல்வுட், நாதன் லயன், குவாஜா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    வார்னருடன், குவாஜா அல்லது ரென்ஷா தொடக்க வீரராக களம் இறக்கப் படலாம் என்று தெரிகிறது. அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே. பயிற்சி ஆட்டத்தில் அந்த அணி சிறப்பாக விளையாடியதால் இந்தியாவை நம்பிக்கையுடன் சந்திக்க தயாராகிவிட்டது.



    ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய கையோடு இந்தியாவை எதிர்கொள்கிறது. ஆனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது என்பது ஆஸ்திரேலியாவுக்கு சவாலானதே.

    ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2013-ம் ஆண்டு இந்தியா வந்தபோது 4 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. இந்த முறையாவது இந்தியாவை வென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.

    காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இரு அணி வீரர்கள் விவரம்:



    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், புஜாரா, ரகானே, ஹர்த்திக் பாண்டியா, விருத்திமான் சகா, அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கருண் நாயர், அபினவ் முகுந்த், குல்தீப் யாதவ்.



    ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், மிச்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல், மேத்யூவாடே, உஸ்மான் குவாஜா, ஆஸ்டன் அகர், ஜேக்சன்பேர்டு, ஹாசல்வுட், பீட்டர் ஹேண்ட்ஸ் ஹோம், நாதன் லயன், ஸ்டீவ் ஒசிபி, மேட் ரென்ஷா, ஸ்டார்க், சுவிப்சன்.
    Next Story
    ×