search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணி உரிமையாளர் சம்மதத்தால் லாகூரில் பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி
    X

    அணி உரிமையாளர் சம்மதத்தால் லாகூரில் பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி

    அணி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்ததால் லாகூர் கடாபி மைதானத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
    ஐ.பி.எல், பி்க் பாஷ் போன்ற பிரபலமான டி20 லீக் கிரிக்கெட்டை போல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ என்ற தொடரை நடத்தி வருகிறது. இதில் ஐந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்த தொடர் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. மார்ச் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இலங்கை அணி பாகிஸ்தான் சென்றிருந்தபோது வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. சுமார் 8 வருடங்களாக பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் சொந்த மண்ணில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதை பார்க்க முடியாமல் தவித்து வருகின்றன.

    இதற்கு ஏராளமான முயற்சிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்து வருகிறது. சமீபத்தில் ஐ.சி.சி. தலைவர்களில் ஒருவர் பாகிஸ்தான் வந்து பாதுகாப்பு குறித்து ஆராய்ந்தார். அப்போது பாகிஸ்தானில் விரைவில் சர்வதேச போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளது என்றார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியை லாகூரில் நடத்தி, வெளிநாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு குறித்த அச்சத்தை போக்கினால், சில நாடுகளை பாகிஸ்தானில் விளையாட அழைக்கலாம் என்று எண்ணியிருந்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். இதற்காக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

    எல்லாம் கைக்கூடி வரும் நிலையில் கடந்த வாரம் பஞ்சாப் மாகாணம் லாகூர் பகுதியில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி லாகூரில் நடைபெறுமா? என்ற கேள்வி எழும்பியது.

    ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. ஐந்து அணி உரிமையாளர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது அவர்கள் லாகூரில் வந்து விளையாட சம்மதம் தெரிவித்தனர்.

    இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறுதிப் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் சேர்மன் நஜம் சேதி கூறுகையில் ‘‘பாகிஸ்தான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஐந்து அணிகள் உரிமையாளர்களின் அர்ப்பணிப்பு எங்களது மனதை உருகச் செய்துள்ளது. லாகூரில் போட்டியை நடத்த நாங்கள் அனைவரும் உறுதியோடு உள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×