search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு பரிசு வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
    X
    கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு பரிசு வழங்கப்பட்டபோது எடுத்த படம்.

    தென் மண்டல கபடி போட்டி: தமிழக அணி சாம்பியன்

    விக்கிரமசிங்கபுரம் அருகே நடந்த தென் மண்டல கபடி இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. பெண்கள் பிரிவில் ஆந்திர அணி முதலிடத்தை வென்றது.
    விக்கிரமசிங்கபுரம்:

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் 64-வது தென் மண்டல அளவிலான கபடி போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவில் இறுதி போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் தமிழ்நாடு அணியும், கர்நாடகா அணியும் விளையாடின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் ஒன்றிரண்டு புள்ளிகளிலேயே மாறி, மாறி முன்னிலை வகித்தபடி விளையாடிக் கொண்டிருந்தன. இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. ரசிகர்கள் பலத்த ஆரவாரம் செய்தும், கரவொலி எழுப்பியும் தமிழக அணியை உற்சாகப்படுத்தினர். இதனால் தமிழக வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆட்டத்தின் முடிவில் தமிழக அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக அணி 42 புள்ளிகளும், கர்நாடகா அணி 31 புள்ளிகளும் எடுத்தது.

    இதே போல் பெண்கள் பிரிவின் இறுதி போட்டியில் ஆந்திரா-கர்நாடகா அணிகள் மோதின. இதில் ஆந்திர அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

    முன்னதாக இறுதி போட்டியை சிங்கை ஸ்போர்ட்ஸ் லவ்வர்ஸ் கிளப் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது.

    2-வதாக ரூ.75 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை கர்நாடகா அணிக் கும், 3-வது, 4-வது பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், பரிசு கோப்பையும் கேரள, புதுச்சேரி அணிக்கும் வழங்கப்பட்டது.

    இதே போல் பெண்கள் பிரிவில் முறையே ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா அணிகள் பரிசுகளை தட்டிச் சென்றன.

    சிறந்த ஆட்டக்காரர்களாக ஆண்கள் பிரிவில் தமிழக அணி வீரர்கள் விஜின், ஸ்ரீராம், கர்நாடகா அணி வீரர் மிக்டல் மிக்டர் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஆந்திர வீராங்கனை மோனிகா, கர்நாடக வீராங் கனை உஷாராணி, தமிழ்நாடு வீராங்கனை கலையரசி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    விழாவில் மாவட்ட கபடி கழக தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், செயலாளர் பகவதி பெருமாள், சிங்கை ஸ்போர்ட்ஸ் லவ்வர்ஸ் கிளப் செயலாளர் சேகர் மனோகரன், ஒருங்கிணைப்பாளர் மனோகரன் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன் நன்றி கூறினார்.
    Next Story
    ×