search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பர்-1 பந்துவீச்சாளராக வருவேன் என நினைக்கவே இல்லை: இம்ரான் தாஹிர்
    X

    நம்பர்-1 பந்துவீச்சாளராக வருவேன் என நினைக்கவே இல்லை: இம்ரான் தாஹிர்

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவே இல்லை என்று இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.
    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர். இவர் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் இலங்கை அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையிலும் அவர்தான் முதல் இடத்தில் உள்ளார்.

    தற்போது தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு நியூசிலாந்துக்கு எதிராக ஒரேயொரு டி20 மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதையொட்டி பேட்டி அளித்த இம்ரான் தாஹிர், நான் ஒருபோதும் முதல் இடத்தை பிடிப்பேன் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கும்போது முதல் இடத்தை பிடிப்பேன் என்று நினைத்ததே இல்லை. இந்த இடம் கிடைப்பதற்கு முக்கிய காரணம் என்னுடைய கடின உழைப்புதான். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

    தென்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய கவுரவம். கடந்த சில ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் எனக்கு உதவி செய்து வருகிறார்கள். இதனால் நாள் ஒரு சிறந்த பந்து வீச்சாளராக இன்று உயர்ந்துள்ளேன். இந்த வெற்றியின் ஆதாயம் அவர்களையும் சேரும். இதே இடத்தில் தொடர்ந்து நீடிக்க முயற்சி செய்வேன். இருந்தாலும் அணியில் மேலும் சிறந்த வீரர்களும் உள்ளனர்” என்றார்.
    Next Story
    ×