search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி
    X

    வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி

    வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
    கிறைஸ்ட்சர்ச்:

    வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்தது. இதில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 289 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி மழையால் பாதிக்கப்பட்ட 2-வது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து இருந்தது. கனமழை காரணமாக 3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 92.4 ஓவர்களில் 354 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக நிகோல்ஸ் 98 ரன்கள் சேர்த்தார். வங்காளதேச அணி தரப்பில் ஷகிப் அல்-ஹசன் 4 விக்கெட்டும், மெக்தி ஹசன் மிராஸ், கம்ருல் இஸ்லாம் ரபி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    65 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி, நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 52.5 ஓவர்களில் 173 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மக்முதுல்லா 38 ரன்னும், சவ்மியா சர்கார் 36 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, வாக்னர் தலா 3 விக்கெட்டும், கிரான்ட்ஹோம் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜீத் ராவல் 33 ரன்னில் ஆட்டம் இழந்தார். டாம் லாதம் 41 ரன்னும், கிரான்ட்ஹோம் 33 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஆட்டநாயகன் விருது பெற்றார். 56-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டிம் சவுதி மொத்தம் 201 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரையும் நியூசிலாந்து அணி முழுமையாக (3-0) வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×