search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
    X

    இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி கடைசி ஒரு நாள் போட்டியில் இன்று களம் இறங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    கொல்கத்தா :

    இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2-வது ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தொடரை முழுமையாக வசப்படுத்தும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி ஒரு நாள் போட்டி இது தான். இதில் வென்றால் மனரீதியாக கூடுதல் நம்பிக்கையை பெற முடியும். அதனால் இந்திய வீரர்கள் இந்த ஆட்டத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

    தொடக்க ஆட்டத்தில் விராட் கோலி, கேதர் ஜாதவின் சதங்களின் உதவியுடன் இந்திய அணி 351 ரன்கள் இலக்கை சேசிங் செய்து அசத்தியது. 2-வது ஒரு நாள் போட்டியில் மூத்த வீரர்கள் டோனி, யுவராஜ்சிங் ஆகியோர் சதங்களினால் இந்தியா 381 ரன்களை குவித்து மலைக்க வைத்தது. ஆனால் இரு ஆடுகளமும் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் பந்து வீச்சாளர்களால் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் முதல் இரு ஆட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆடுகளத்தில் கொஞ்சம் புற்கள் இருப்பது போல் தெரிகிறது. அதனால் பந்து வீச்சு ஓரளவு எடுபடலாம்.

    இருப்பினும் புனே, கட்டாக்கில் ரன்மழை பொழிந்து குதூகலப்படுத்திய இந்திய வீரர்கள் இன்றைய ஆட்டத்திலும் வாணவேடிக்கை காட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் கூறுகையில், ‘தொடரை வென்று விட்டதால் எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. ஆனால் சர்வதேச கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறவே விரும்புகிறோம். நெருக்கடி இல்லாததால் மேலும் உற்சாகமாக செயல்படுவோம்’ என்றார்.

    மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியை நோக்கி களம் காணும். முந்தைய இரு ஆட்டங்களிலும் கடைசி நேரத்தில் வெற்றியை கோட்டை விட்ட இங்கிலாந்து அதற்கு பரிகாரம் தேட முயற்சிக்கும். காயத்தால் தொடரை விட்டு விலகிய அலெக்ஸ் ஹாலெசுக்கு பதிலாக அதிரடி ஆட்டக்காரர் சாம் பில்லிங்ஸ் ஆடுவார் என்று தெரிகிறது.

    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. இங்கிலாந்து இங்கு ஆடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியையே (இந்தியாவுடன் 2 ஆட்டம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) தழுவியிருக்கிறது.

    கடைசியாக 2014-ம் ஆண்டு இங்கு நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியதும், அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்ததும் நினைவு கூரத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் அல்லது ரஹானே, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், சாம் பில்லிங்ஸ், ஜோ ரூட், இயான் மோர்கன் (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், டேவிட் பில்லி, ஜாக் பால்.
    Next Story
    ×