search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்த வங்காள தேசம்
    X

    2-வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்த வங்காள தேசம்

    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் வங்காள தேச பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து ரன்னை கட்டுப்படுத்தியுள்ளனர்.
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேச அணியின் துவக்க வீரர் தமீம் இக்பால் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெஹ்முதுல்லா 19 ரன்களில் வெளியேறினார்.

    இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவுமியா சர்க்கார்- சாகிப் அல் அசன் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். அரைசதம் கடந்து விளையாடிய சவுமியா சர்க்கார் 86 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சாகிப் 59 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

    அதன்பின்னர் நியூசிலாந்தின் சிறப்பான பந்துவீச்சில் வங்காள தேசம் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தன. நுருல் ஹசன் (47 ரன்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, வங்காள தேச அணியின் முதல் இன்னிங்ஸ் 289 ரன்களில் முடிவுக்கு வந்தது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

    நியூசிலாந்து தரப்பில் சவுத்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். போல்ட் 4 விக்கெட்டும், வாக்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து அணியின் ராவல், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராவல் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சனை 2 ரன்னில் வெளியேற்றினார் கம்ருல் இஸ்லாம் ரபி.

    நியூசிலாந்து அணி 47 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு லாதம் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தது. லாதம் 68 ரன்கள் எடுத்தும், டெய்லர் 77 ரன்களும் எடுத்தும் ஆட்டம் இழந்தனர்.

    அதன்பின் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுக்களை சீரான இடைவெளியில் வங்காள தேச பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினார்கள். சான்ட்னெர் (29), வாட்லிங் (1), கிராண்ட்ஹோம் (0) அடுத்தடுத்து அவுட்டாக நிக்கோல்ஸ் மட்டும் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார்.

    நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்குள் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது.

    அப்படியிருந்தாலும் 2-வது இன்னிங்சில் வங்காள தேசம் அணி அதிக ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். அப்படி குவித்தால்தான் நியூசிலாந்திற்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
    Next Story
    ×