search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
    X

    3-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

    பெர்த்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 92 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இரு அணிகள் மோதிய 3-வது போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் மொகமது ஹபீஸ், ஷர்ஜீல் கான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹபீஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். இவர் ஷர்ஜீல் கான் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஷர்ஜீல்கான் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க, பாபர் ஆசம் 84 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த சோயிப் மாலிக் (39), உமர் அக்மல் (39) ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் வார்னர், கவாஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கவாஜா 9 ரன்கள் எடுத்த நிலையிலும், வார்னர் 35 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஹேண்ட்ஸ்காம்ப் 82 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். ஆனால் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அணியை வெற்றி பெறவைத்தார். ஆஸ்திரேலியா 45 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மித் 108 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கிடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் 22-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×