search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா: யுவராஜ் - டோனி போராட்டம்
    X

    25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா: யுவராஜ் - டோனி போராட்டம்

    கட்டாக்கில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 14 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. 3-வது ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராகுல் பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 5 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    அடுத்து விராட் கோலி தவான் உடன் ஜோடி சேர்ந்தார். அதே ஓவரில் 2-வது மற்றும் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, கடைசி பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய தவானும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 5-வது ஓவரின் 4-வது பந்தில் தவான் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் வோக்ஸ்தான் வீழ்த்தினார்.

    இதனால் இந்தியா 4.4 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் விக்கெட்டுக்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் நிதானமாக விளையாடினார்கள்.

    குறிப்பாக டோனி மிகவும் நிதானமாக விளையாடினார். யுவராஜ் சிங் அவ்வப்போது பந்தை பவுண்டரிகளுக்கு விரட்டிக் கொண்டிருந்தார். இதனால் ரன் விகிதம் சற்று உயர்ந்து கொண்டிருந்தது. 16 ஒவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. யுவராஜ் சிங் 35 ரன்னுடனும், டோனி 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×