search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா, போபண்ணா ஜோடிகள் வெற்றி
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா, போபண்ணா ஜோடிகள் வெற்றி

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, போபண்ணா ஜோடிகள் முதல் சுற்றில் வெற்றி பெற்றது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    மெல்போர்ன் :

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-3, 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் தகுதி நிலை வீரர் ஆந்த்ரே ருப்லெவை துவம்சம் செய்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மணிக்கு அதிகபட்சமாக 206 கிலோ மீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்டு மிரட்டிய முர்ரே இந்த வெற்றியை ஒரு மணி 36 நிமிடங்களில் வசப்படுத்தினார். முன்னதாக 3-வது செட்டின் போது கணுக்காலில் வலியால் அவதிப்பட்ட முர்ரே, சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடினார்.

    முன்னாள் சாம்பியன்கள் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7-5, 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் நோ ருபினையும் (அமெரிக்கா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்டீவ் ஜான்சனையும் (அமெரிக்கா) விரட்டினர். ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ந்து 18-வது ஆண்டாக 3-வது சுற்றை எட்டியிருக்கும் பெடரர் அடுத்து செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோத இருக்கிறார்.

    உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின் சிலிச் 6-3, 5-7, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் டேனியல் இவான்சிடம் (இங்கிலாந்து) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். இதே போல் 14-ம் நிலை வீரர் நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) 6-1, 7-6 (1), 4-6, 2-6, 8-10 என்ற செட் கணக்கில் ஆன்ட்ரியாஸ் செப்பியிடம் (இத்தாலி) வீழ்ந்தார். மற்றொரு முன்னணி வீரர் அமெரிக்காவின் ஜான் இஸ்னரும் 2-வது சுற்றோடு மூட்டையை கட்டினார்.

    நிஷிகோரி (ஜப்பான்), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), சோங்கா (பிரான்ஸ்), சாம் குயரி (அமெரிக்கா), ஜாக் சோக் (அமெரிக்கா), பெர்னர்ட் தாமிக் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தங்களது 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    இதன் இரட்டையர் முதலாவது சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)- பாப்லோ கியூவாஸ் (உருகுவே) ஜோடி 6-4, 7-6 (4) என்ற நேர் செட்டில் தாமஸ் பெல்லுச்சி (பிரேசில்)- மேக்சிமோ கோன்சலேஸ் (அர்ஜென்டினா) இணையை வென்றது.

    பெண்கள் ஒற்றையரில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) முதல் சுற்றை போன்றே 2-வது செட்டிலும் தடுமாறியே வெற்றி கண்டார். சக நாட்டவர் கரினா விட்தோப்ட்டை 6-2, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி 8 நிமிடங்கள் போராடி வீழ்த்திய கெர்பர் அடுத்து கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்திக்கிறார். “முக்கியமான கட்டத்தில் நிறைய தவறுகளை செய்தேன். எப்படியோ இறுதியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்த கெர்பர் தனது 29-வது பிறந்த நாளை நேற்று ‘கேக்’ வெட்டி உற்சாகமாக கொண்டாடினார். ‘இங்கு (மெல்போர்ன்) இருப்பதை சொந்த ஊரில் இருப்பது போன்று உணர்கிறேன். எனவே பிறந்த நாளின் போது ஆஸ்திரேலியாவில் இருப்பது எப்போதும் சிறப்பு வாய்ந்தது’ என்றும் கெர்பர் குறிப்பிட்டார்.

    பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-5, 6-4 என்ற நேர் செட்டில் சமந்தா கிராபோர்டை (அமெரிக்கா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) தன்னை எதிர்த்த ஸ்டெபானி வோஜிலியை (சுவிட்சர்லாந்து) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெளியேற்றினார். ஸ்விடோலினா (உக்ரைன்), ஆஷ்லேய்க் பார்ட்டி ( ஆஸ்திரேலியா), ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா (ரஷியா), ஜான்கோவிச் (செர்பியா), பவுச்சார்ட் (கனடா) உள்ளிட்டோரும் 3-வது சுற்றை உறுதி செய்தனர்.

    அதே சமயம் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரும், தரவரிசையில் 46-வது இடம் வகிப்பவருமான பியூர்டோரிகோ வீராங்கனை மோனிகா பிய்க் மண்ணை கவ்வினார். அவரை 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 181-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் மோனா பார்தெல் சாய்த்தார்.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா கூட்டணி முதல் தடையை வெற்றிகரமாக கடந்தது. இவர்கள் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ஜோசிலின் ராவ்- அனா சுமித் இணையை வீழ்த்தினர்.
    Next Story
    ×