search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது
    X

    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது

    ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.
    பெர்த்:

    ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 92 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று நடக்கிறது.

    அசார் அலி காயத்தால் விலகியதால் முகமது ஹபீஸ் தலைமையில் 2-வது போட்டியில் களம் கண்ட பாகிஸ்தான் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றியை சுவைத்தது. அந்த நம்பிக்கையுடன் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி களம் இறங்கும். காயம் குணமடையாததால் அசார் அலி இந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. முகமது அமிர், ஜூனைத் கான் ஆகியோரின் பந்து வீச்சு கடந்த ஆட்டத்தில் அபாரமாக இருந்தது.

    ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகி விட்டதால் அவருக்கு பதிலாக அறிமுக வீரராக பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் அணியில் இடம் பெறுகிறார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்குக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பில்லி ஸ்டான்லேக்குக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க நிலை பேட்ஸ்மேன்கள் இரண்டு போட்டியிலும் சிறப்பாக செயல்படவில்லை. அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அந்த அணிக்கு உள்ளது.

    பெர்த் மைதானத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுடன் 6 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி 4 முறையும், ஆஸ்திரேலிய அணி 2 தடவையும் வென்று இருக்கிறது.

    இந்த போட்டிக்கான உத்தேச அணிகள் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித் (கேப்டன்), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், ஜேம்ஸ் பவுல்க்னெர், கம்மின்ஸ், ஹேசில்வுட், பில்லி ஸ்டான்லேக்.

    பாகிஸ்தான்: முகமது ஹபீஸ் (கேப்டன்), ஷர்ஜீல்கான், பாபர் அசாம், ஆசாத் ஷபிக், சோயிப் மாலிக், உமர் அக்மல், முகமது ரிஸ்வான், இம்ராத் வாசிம், முகமது அமிர், ஜூனைத்கான், ஹசன் அலி அல்லது வஹாப் ரியாஸ்.

    இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 
    Next Story
    ×