search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டாக்கில் நாளை 2-வது போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?
    X

    கட்டாக்கில் நாளை 2-வது போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நாளை நடக்கிறது.
    கட்டாக்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    புனேயில் நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் 351 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்ற இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் புனே ஆட்டம் இருந்தது. இரு அணிகளும் சேர்த்து 706 ரன்களை குவித்தது. இதுபோன்ற அதிரடியான ஆட்டம் கட்டாக் போட்டியிலும் நிகழ்த்தப்படுமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    விராட் கோலி, கேதர் ஜாதவின் அதிரடியான சதத்தால் முதல் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. இருவரது மீதான எதிர்பார்ப்பு கட்டாக் போட்டியிலும் இருக்கிறது. புனேயில் சாதிக்க தவறிய ராகுல், தவான், யுவராஜ்சிங், முன்னாள் கேப்டன் டோனி ஆகியோர் திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.

    இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாகவே இருக்கிறது. முன்னணி சுழற்பந்து வீரரான அஸ்வின் விக்கெட் கைப்பற்றாதது பதிதாபமே. ஆல்-ரவுண்டர் வரிசையில் இருக்கும் ஹர்த்திக் பாண்டியா நாளையும் தனது அதிரடியை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெஸ்ட் தொடரை ஏற்கனவே இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்கும் வகையில் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற போராடும்.

    புனே ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமநிலைப்படுத்தும் ஆர்வத்துடன் அந்த அணி உள்ளது. முதல் போட்டியில் 350 ரன் குவித்தும் தோற்றதால் அந்த அணி வீரர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர். இதற்கு பழி தீர்க்கும் வகையில் கட்டாக் போட்டியில் விளையாடுவார்கள்.

    இங்கிலாந்து அணியில் ஜோரூட், ஜேசன்ராய், பென் ஸ்டோக்ஸ், ஹால்ஸ், கேப்டன் மோர்கன், மொய்ன் அலி, ஜேக்பால் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

    ஒருநாள் போட்டியின் புதிய கேப்டனான விராட் கோலி இந்த தொடரையும் வென்று முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டோர் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), தவான், ராகுல், யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, உமேஷ் யாதவ், ரகானே, மனிஷ் பாண்டே, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார்.

    இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), ஜேசன்ராய், ஹால்ஸ், ஜோரூட், பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, கிறிஸ்வோக்ஸ், டேவிட் வில்லி, ஆதில் ரஷீத், ஜேக்பால், பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், டாசன்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 95-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 94 ஆட்டத்தில் இந்தியா 51-ல், இங்கிலாந்து 38-ல் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் முடிவு இல்லை. 2 போட்டி ‘டை’யில் முடிந்தது.

    கட்டாக் பாராபதி மைதானம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருக்கும். ஆனால் பனிதுளியின் பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. மாலை 5.30 மணியில் பணிதுளி தொடங்கும். இதனால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு ஏற்ற வகையில் தான் ஆடுகளம் செயல்படும்.

    கட்டாக் போட்டியையொட்டி பாராபதி ஸ்டேடியத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 20 ஓவர் போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு பாட்டீல்களை வீசி மைதானத்துக்குள் எறிந்தனர். அதுபோன்ற சம்பவம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் பாதுகாப்பை போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமிராக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×