search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியுடன் பேட் செய்வது சாதகமான அம்சம்: ஜாதவ்
    X

    விராட் கோலியுடன் பேட் செய்வது சாதகமான அம்சம்: ஜாதவ்

    விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்யும் போதெல்லாமல் அது எதிர்முனை வீரருக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்று கேதர் ஜாதவ் பேட்டியளித்துள்ளார்.
    புனே :

    இங்கிலாந்துக்கு எதிராக புனேயில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 65 பந்துகளில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட இந்திய வீரர் கேதர் ஜாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்யும் போதெல்லாமல் அது எதிர்முனை வீரருக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். ஏனெனில் பந்து வீச்சாளர்கள் அவரை எப்படி கட்டுப்படுத்துவது, அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவது எப்படி என்பதில் தான் குறியாக இருப்பார்கள். எதிர்முனையில் நிற்கும் வீரரை பற்றி அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். அவருடன் பேட் செய்யும் போது, எதிர்முனை பேட்ஸ்மேனுக்கு சில நேரம் ரொம்ப சாதாரணமாக கூட பந்து வீசுவார்கள். அவ்வாறான பந்துகளில் எளிதில் ரன் எடுத்து விட முடியும். அதே போல் அதிகமான நெருக்கடியும் கொடுக்கமாட்டார்கள். இப்படி அவருடன் பேட் செய்யும் போது நிறைய சாதகமான அம்சங்கள் கிடைக்கும்.

    ஒரு நாள் போட்டி அணியில் இனி எனக்கு இடம் உறுதி என்ற மெத்தனத்துடன் இருக்கமாட்டேன். ஒவ்வொரு ஆட்டத்தையும், இது தான் எனது கடைசி ஆட்டம் என்ற அணுகுமுறையுடன் விளையாடுவேன். இந்திய அணிக்கு களம் காண வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 100 சதவீதத்திற்கு மேல் திறமையை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம். எனவே நானும் கிடைக்கும் வாய்ப்பில் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன்’

    இவ்வாறு ஜாதவ் கூறினார்.

    மேலும் ஜாதவ் “முதலாவது ஆட்டத்திற்கு பிறகு நிறைய போன் அழைப்புகள் வருகின்றன. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் எனது செல்போனை ‘சைலன்ட்’டில் போட்டு வைத்துள்ளேன். இப்போது எனது நடவடிக்கைகள் வேறு விதமாக மாறி விட்டதாக சிலர் நினைக்கலாம். ஆனால் எனது கவனம் முழுவதும் தொடரின் மீதே இருக்கிறது. கவனம் சிதறாமல் இருக்க இந்த விஷயத்தில் எனது குடும்பத்தினர், நண்பர்கள் உதவிகரமாக இருக்கிறார்கள். நடந்து முடிந்த ஆட்டம் குறித்து அதிகமாக பேசிக்கொண்டிருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நடப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவே முயற்சிக்கிறேன்.” என்றார்.

    ஆப்-சைடில் வந்த பந்துகளையும் பெரும்பாலும் நேர் பகுதியிலேயே (ஸ்டிரைட்) தூக்கியடித்தது குறித்து கேட்ட போது, ‘சிறுவயதில் டென்னிஸ் பந்தில் தான் அதிகமாக விளையாடுவோம். அப்போது நேர் பகுதியில் சிக்சர் அடித்தால் மட்டுமே ரன் உண்டு. வேறு எந்த பகுதியில் அடித்தாலும் அவுட் என்று சொல்லி விளையாடுவோம். அந்த தாக்கம் தான் இங்கும் எதிரொலித்தது’ என்றார்.
    Next Story
    ×