search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர், வாவ்ரிங்கா வெற்றி
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர், வாவ்ரிங்கா வெற்றி

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழாவில், முதல் சுற்றில் பெடரர், வாவ்ரிங்கா வெற்றி பெற்றனர். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    மெல்போர்ன் :

    ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    கால் முட்டி காயத்தால் 6 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு சவால்மிக்க டென்னிஸ் களத்திற்கு திரும்பியுள்ள முன்னாள் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தகுதி நிலை வீரர் ஜூர்ஜென் மெல்சரை (ஆஸ்திரியா) சந்தித்தார். இதில் 35 வயதான பெடரர் 7-5, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 6 நிமிடங்கள் நடந்தது. பெடரர் அடுத்து தரவரிசையில் 200-வது இடம் வகிக்கும் அமெரிக்க தகுதி நிலை வீரர் நோ ருபினுடன் மோத உள்ளார்.

    முன்னாள் சாம்பியனும், 4-ம் நிலை வீரருமான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவுக்கு முதல் சுற்று எளிதாக அமையவில்லை. அவர் சுலோவக்கியாவின் மார்ட்டின் கிளைஜானுடன் மோதினார். முதல் தடையை கடக்க வாவ்ரிங்கா 3 மணி 24 மணி நேரம் யுத்தம் நடத்த வேண்டி இருந்தது. 5 செட் வரை நீடித்த பரபரப்பான இந்த மோதலில் வாவ்ரிங்கா 4-6, 6-4, 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கிளைஜானை தோற்கடித்தார். 21 ‘ஏஸ்’ சர்வீஸ்கள் வீசியது வாவ்ரிங்காவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. இதே போல் ஜப்பான் முன்னணி வீரர் நிஷிகோரி 5-7, 6-1, 6-4, 6-7 (6-8), 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஆந்த்ரே குஸ்னட்சோவை வென்றார்.

    மரின் சிலிச் (குரோஷியா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), பெர்னர்ட் தாமிக் (ஆஸ்திரேலியா), சோங்கா (பிரான்ஸ்) ஆகியோரும் தங்களது முதல் ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    பிரான்சின் ஜெரிமி சார்டிக்கு எதிராக களம் இறங்கிய ஸ்பெயின் வீரர் நிகோலஸ் அல்மாக்ரோ முதல் செட்டில் 0-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தபோது பின்னங்காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறி விலகினார். இதையடுத்து 23 நிமிடங்களிலேயே ஜெரிமி சார்டி வெற்றி பெற்றதாக பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    முதல் சுற்றில் தோற்றாலும் பரிசாக ரூ.25 லட்சம் வழங்கப்படும். அதற்குரிய காசோலை யை பெற உடனடியாக அல்மாக்ரோ மைதானத்திற்கு வந்தார். இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்டு சீக்கிரம் தாயகம் திரும்ப வேண்டும் என்பதற்காக அவர் பாதியிலேயே விலகினாரா? என்ற சந்தேகம் கிளம்பியது. ஆனால் அதனை அல்மாக்ரோ மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘விளையாடுவதற்காகத்தான் நான் களத்திற்குள் நுழைந்தேன். தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருந்தவன் நான். 10 மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்துள்ளேன். இந்த சிறிய தொகைக்காக நான் விளையாடுவதில்லை. இது சரியான காரணம் அல்ல’ என்று பதில் அளித்தார்.
    Next Story
    ×