search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்: ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா?
    X

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்: ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா?

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    மெல்போர்ன்:

    டென்னிஸ் போட்டியில் மிகவும் பிரசித்து பெற்றது கிராண்ட்சிலாம் போட்டிகளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் நடைபெறும்.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருகிற 29-ந்தேதிவரை இந்தப் போட்டி நடக்கிறது.

    உலகின் முதல்நிலை வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), நடப்பு சாம்பியனும், இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), ரோனிக் (கனடா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), நிஷிகோரி (ஜப்பான்),, மான்பில்ஸ் (பிரான்ஸ்), சிலிச் (குரோஷியா) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள். முன்னாள் பிரபல வீரர்களான ரபெல் நடால் (ஸ்பெயின்) 9-வது வரிசையிலும், ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 17-வது வரிசையிலும் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றால் ஜோகோவிச் புதிய சாதனை படைப்பார். அவர் இதுவரை 6 தடவை (2008, 2011, 2012, 2013, 2015, 2016) வென்றுள்ளார். ராய் எமர்சனும் (ஆஸ்திரேலியா) இதே மாதிரி 6 முறை பட்டம் வென்றுள்ளார். ஜோகோவிச் சாம்பியன் பட்டம் பெற்றால் ஆஸ்திரேலிய ஒபனை அதிக தடவை வென்ற வீரர் என்ற சரித்திரத்தை படைப்பார்.

    மேலும் தொடர்ச்சியாக 3-வது முறையாக வென்று இரண்டாவது தடவை ஹாட்ரிக் பட்டம் பெறும் ஆர்வத்துடனும் உள்ளார். 13-வது கிராண்ட்சிலாம் வெல்லும் நோக்கிலும் இருக்கிறார்.

    அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவர்களில் 4-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச்சுக்கு நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே கடும் சவாலாக இருப்பார். அவர் 5 முறை ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் தோற்று இருக்கிறார். அதுவும் ஜோகோவிச்சிடம் 4 முறை வீழ்ந்தார். தற்போது அதற்கு பதிலடி கொடுத்து 4-வது கிராண்ட்சிலாம் பட்டத்தையும், முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் வெல்லும் வேட்கையில் முர்ரே உள்ளார்.

    இதேபோல் அமெரிக்க ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா, ரோனிக் ஆகியோரும் சவாலாக திகழ்வார்கள். அதிக கிராண்ட்சிராம் வென்ற சாதனையாளரான ரோஜர் பெடரர் (17 பட்டம்), மற்றும் ரபெல் நடால் (14) ஆகியோரால் ஆதிக்கம் செலுத்துவது சவாலானதே பிரெஞ்சு ஓபன் சாதனையாளரான நடால் 2014-ம் ஆண்டுக்கு பிறகு, பெடரர் 2012-ம் ஆண்டுக்கு பிறகும் கிராண்ட்சிலாம் வென்றது இல்லை.

    பெண்கள் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான கெர்பர் (ஜெர்மனி) 2-வது வரிசையில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ரட்வன்ஸ்கா (போலந்து), ஷிமோனா ஹெல்ப் (ருமேனியா), கரோலினா (செக்குடியரசு), சிபுல்கோவா (சுலோவாக்கியா), முகுருஜா (ஸ்பெயின்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    கடந்த ஆண்டு இரண்டு கிராண்ட்சிலாமையும் (ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன்), வென்ற கெர்பர் இந்த ஆண்டிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார். செரீனா வில்லியம்ஸ் 23-வது பட்டத்தை வென்று ஸ்டெபி கிராப்பை முறியடித்து 2-வது இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளார். அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவர்களில் ஸ்டெபிகிராப் 2-வது இடத்தில் இருக்கிறார்.

    மேலும் செரீனா ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது தடவையாக வெல்லும் வேட்கையிலும் உள்ளார். ரட்சன்ஸ்கோ ஷிமோனா ஹெலப் ஆகியோரும் சவாலாக இருப்பார்கள்.
    Next Story
    ×