search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத்
    X

    மும்பையை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத்

    இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி டிராபி இறுதி ஆட்டத்தில் மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குஜராத்.
    மும்பை - குஜராத் அணிகள் மோதிய ரஞ்சி டிராபி இறுதி ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 228 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் ப்ரித்வி ஷா 71 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 57 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் குஜராத் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் பார்தீவ் பட்டேல் 90 ரன்னும், ஜுனேஜா 77 ரன்களும் சேர்க்க 328 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் குஜராத் அணி சரியாக 100 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    100 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ப்ரித்வி ஷா 44 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்னும், கேப்டன் தாரே 69 ரன்னும், அபிஷேக் நாயர் 91 ரன்களும் சேர்க்க மும்பை அணி 411 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 100 ரன்கள் பின்தங்கியதால் மும்பை அணி ஒட்டுமொத்தமாக 311 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் குஜராத் அணிக்கு 312 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    117 ஓவரில் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் குஜராத் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்திருந்தது. பன்சால் 34 ரன்னுடனும், கோஹில் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. பன்சால் நேற்றைய 34 ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். கோஹில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பர்கவ் மேராய் 2 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் குஜராத் அணி 89 ரன்கள் எடுத்த நிலையில் 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் பார்தீவ் பட்டேல் - ஜுனேஜா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜுனேஜா 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் பார்தீவ் பட்டேல் சதம் அடித்ததோடு அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். அணியின் ஸ்கோர் 299 ரன்னாக இருக்கும்போது பார்தீவ் பட்டேல் 143 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

    அதன்பின் வந்த பாட் மற்றும் காந்தி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். குஜராத் அணி 89.5 ஓவரில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 313 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.



    சுமார் 60 வருட காலத்தில் குஜராத் அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை 42-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை இழந்தது.

    233 ரன்கள் குவித்த பார்தீவ் பட்டேல் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
    Next Story
    ×