search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ஒலிம்பிக் சங்க இடைநீக்கத்தை ரத்து செய்தது விளையாட்டு அமைச்சகம்
    X

    இந்திய ஒலிம்பிக் சங்க இடைநீக்கத்தை ரத்து செய்தது விளையாட்டு அமைச்சகம்

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்த முடிவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று திரும்பப் பெற்றுள்ளது.
    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) ஆயுட்கால தலைவராக சுரேஷ் கல்மாடி, அபய் சிங் சவுதாலா ஆகியோர் கடந்த மாதம் 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நியமிக்கப்பட்டனர். ஊழல் வழக்குகளில் சிக்கிய இருவருக்கும் இப்பதவி வழங்கியதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஐஓஏ-வுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படும் வரை இப்பதவியை ஏற்க மாட்டேன் என சுரேஷ் கல்மாடி அறிவித்தார். ஆனால் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டால் மட்டுமே பதவியேற்கும் முடிவை கைவிடுவேன் என அபய் சிங் சவுதாலா கூறினார்.

    விளையாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டபடி இந்திய ஒலிம்பிக் சங்கம் இருவருக்கும் வழங்கிய பதவியை திரும்ப பெறவில்லை. மேலும் மத்திய அரசின் நோட்டீசுக்கு ஐஓஏ கூடுதல் அவகாசம் கோரியது. நியமனங்களின் சட்டபூர்வ அந்தஸ்து குறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் ஆலோசித்த பிறகே எந்தவொரு முடிவும் எடுக்க முடியும் என ஐஓஏ கூறியது.

    இதனால் கோபம் அடைந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அறிவித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய ஒலிம்பிக் சங்கம் இருவருக்கும் வழங்கிய பதவியை திரும்பப்பெற்றது. மேலும் அங்கீகாரம் ரத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான அங்கீகாரம் ரத்தை திரும்பப்பெற்றுள்ளது.

    அதேசமயம், எதிர்காலத்திலும் உயர்தரத்திலான நேர்மை மற்றும் நெறிமுறைகளை உறுதி செய்ய வேண்டும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தை விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    விளையாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவினை இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் ராமச்சந்திரன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×