search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் காமராஜபுரத்தில் மாநில ஐவர் கால்பந்து போட்டி
    X

    திண்டுக்கல் காமராஜபுரத்தில் மாநில ஐவர் கால்பந்து போட்டி

    திண்டுக்கல்லில் பொங்கல் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.
    திண்டுக்கல் :

    திண்டுக்கல்லில் பொங்கல் தினத்தை முன்னிட்டு கே.எப்.சி. கால்பந்தாட்ட கழகம் மற்றும் காமராஜபுரம் நண்பர்கள் சார்பாக 5-ம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. மின்னொளியில் நடக்கும் இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை, விருதுநகர் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து 40 அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதற்காக அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும் 10 அணிகள் வீதம் ‘நாக்-அவுட்’ முறையில் விளையாடி வருகின்றன.

    நேற்று மாலை நடந்த தொடக்கவிழாவில் சுரபி கல்விநிறுவனங்களின் தாளாளர் ஜோதிமுருகன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் நாட்டாண்மை காஜாமைதீன் உள்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முதலில் நடந்த போட்டியில் கே.எப்.சி. ‘பி’ அணியும், தோட்டனூத்து ஸ்டார் கால்பந்து அணியும் மோதின.

    போட்டியின் முடிவில் கே.எப்.சி. ‘பி’ அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் அணியும், திண்டுக்கல் போலீஸ் அணியும் மோதின. இதில் மாணவர்கள் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் திண்டுக்கல் மரியநாதபுரம் கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., அணியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இதில் சாம்பியன் பட்டம் பெறும் அணி உள்பட 2-வது, 3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு பரிசாக சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    போட்டிக்கான ஏற்பாடுகளை காமராஜபுரம் நண்பர்கள் குழு மற்றும் கே.எப்.சி.கால்பந்தாட்ட கழகம் செய்து வருகின்றன.
    Next Story
    ×